திண்டுக்கல், பழனி, வேடசந்தூர், நிலக்கோட்டையில் விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


திண்டுக்கல், பழனி, வேடசந்தூர், நிலக்கோட்டையில் விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 12 Oct 2019 1:15 PM GMT (Updated: 12 Oct 2019 12:57 PM GMT)

திண்டுக்கல், பழனி, வேடசந்தூர், நிலக்கோட்டையில் கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல்,

திண்டுக்கல் மேற்கு தாலுகா அலுவலகம் முன்பு, அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் வீட்டுமனை பட்டா கேட்டு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு சங்கத்தின் ஒன்றிய தலைவர் அம்மையப்பன் தலைமை தாங்கினார். செயலாளர் பழனிச்சாமி, பொருளாளர் மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றிய தலைவர் ஆரோக்கியம், செயலாளர் ராஜேந்திரன், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் அஜாய்கோஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் பேசினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டனர். அப்போது வீடு இல்லாத விவசாய தொழிலாளர்களுக்கு வீட்டுமனை வழங்க வேண்டும். நீர்நிலைகள், மேய்ச்சல் புறம்போக்கு மற்றும் கோவில் நிலங்களில் குடியிருக்கும் தொழிலாளர்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும்.

அதேபோல் புறம்போக்கு நிலங்களில் குடியிருக்கும் தொழிலாளர்களுக்கு மாற்று இடம் வழங்காமல் வலுகட்டாயமாக வெளியேற்றுவதை மாவட்ட நிர்வாகம் கைவிட வேண்டும். மாதாந்திர உதவித்தொகை கேட்டு விண்ணப்பித்த விதவைகள், முதியோருக்கு உடனடியாக உதவித்தொகை வழங்க வேண்டும். தகுதியானவர்களுக்கு நிறுத்தப்பட்ட ஓய்வூதியத்தை மீண்டும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். இதையடுத்து வீட்டுமனை, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தாலுகா அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது.

பழனி குளத்துரோடு ரவுண்டானா அருகில் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் அருள்செல்வன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் செல்வராஜ், ஒன்றிய செயலாளர்கள் கமலக்கண்ணன் (பழனி), சொக்கலிங்கம் (தொப்பம்பட்டி), மாவட்டக்குழு உறுப்பினர் துரைச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், தமிழகத்தில் வீடு இல்லாத விவசாய தொழிலாளர்கள் அனைவருக்கும் வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். முடிவில் மா.கம்யூனிஸ்டு தொப்பம்பட்டி ஒன்றிய செயலாளர் ராமசாமி நன்றி கூறினார்.

இதேபோல் வேடசந்தூர் தாலுகா அலுவலகம் முன்பு, அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட பொருளாளர் கண்ணன் தலைமை தாங்கினார். தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட செயலாளர் எம்.ஆர்.முத்துசாமி, மாவட்ட தலைவர் டி.முத்துச்சாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் எம்.முனியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். பின்னர் அவர்கள், வேடசந்தூர் தாசில்தார் ராஜேஸ்வரியிடம் மனு கொடுத்துவிட்டு சென்றனர்.

நிலக்கோட்டை தாலுகா அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். இதில் வத்தலக்குண்டு ஒன்றிய செயலாளர் கந்தசாமி, நிலக்கோட்டை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் சவுந்தரராஜன், வத்தலகுண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் கலைச்செல்வன் மற்றும் நிர்வாகிகள் பாலசுப்பிரமணியன், தெய்வேந்திரன், ஜெயராமன் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

Next Story