ஈரோட்டில் மின்தடையை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்


ஈரோட்டில் மின்தடையை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 12 Oct 2019 11:15 PM GMT (Updated: 12 Oct 2019 6:45 PM GMT)

ஈரோட்டில், மின்தடையை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு,

ஈரோடு மாநகராட்சி 57-வது வார்டுக்கு உட்பட்ட பகுதி மோசிக்கீரனார் வீதி, வளையக்கார வீதி ஆகும். இந்த பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் மின்தடை ஏற்பட்டு வந்ததாக அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர். எனினும் மின்வெட்டு சரிசெய்யப்படவில்லை என தெரிகிறது.

இதனால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று முன்தினம் நள்ளிரவில் கிருஷ்ணா தியேட்டர் அருகே உள்ள ஆர்.கே.வி. ரோட்டில் ஒன்று திரண்டனர். பின்னர் அவர்கள் மின்தடையை கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் ஈரோடு டவுன் போலீசார் விரைந்து சென்று, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள், ‘எங்கள் பகுதியில் கடந்த சில நாட்களாக அறிவிக்கப்படாத மின்வெட்டு உள்ளது. இதனால் சிறியவர்கள் முதல் வயதானவர்கள் வரை அனைவரும் மிகவும் சிரமப்படுகிறார்கள்.

மேலும் மின்வாரிய அதிகாரிகளிடம் இதுகுறித்து புகார் செய்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே எங்கள் பகுதியில் மின்தடை ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்கள்.

அதற்கு போலீசார், ‘மின்வாரிய அதிகாரிகளிடம் பேசி, மின்தடை ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றனர். அதை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story