‘நீட்’ தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் மேலும் ஒரு மாணவி தாயுடன் கைது


‘நீட்’ தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் மேலும் ஒரு மாணவி தாயுடன் கைது
x
தினத்தந்தி 12 Oct 2019 11:15 PM GMT (Updated: 12 Oct 2019 8:19 PM GMT)

‘நீட்’ தேர்வில் ஆள் மாறாட்டம் செய்த வழக்கில் தர்மபுரியை சேர்ந்த மேலும் ஒரு மாணவி மற்றும் அவருடைய தாயாரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக சென்னை சவீதா மருத்துவ கல்லூரி முதல்வரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

தேனி,

‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து முறைகேடாக மருத்துவ படிப்பில் மாணவ, மாணவிகள் சேர்ந்தது தொடர்பாக தேனி சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில், சென்னை தண்டையார் பேட்டையை சேர்ந்த மாணவர் உதித்சூர்யா, அவருடைய தந்தை டாக்டர் வெங்கடேசன் ஆகியோரை கடந்த மாதம் 26-ந்தேதி தேனி சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர்.

அவர்கள் கொடுத்த தகவலின் பேரில், சென்னையை சேர்ந்த மாணவர் பிரவீண், அவருடைய தந்தை சரவணன், மாணவர் ராகுல், அவருடைய தந்தை டேவிஸ், வாணியம்பாடியை சேர்ந்த மாணவர் இர்பானின் தந்தை முகமது ஷபி ஆகியோரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மாணவர் இர்பான் சேலம் கோர்ட்டில் சரண் அடைந்ததை தொடர்ந்து, அவரும் நீதிமன்ற காவலில் சேலம் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர், காவல் நீட்டிக்கப்பட்டு தேக்கம்பட்டியில் உள்ள தேனி மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்தநிலையில், தர்மபுரியை சேர்ந்த மாணவி ஒருவரும் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளதாக சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், தர்மபுரியை சேர்ந்த அர்ஜுனன் மகள் பிரியங்கா, ஆள்மாறாட்டம் செய்து சென்னை சவீதா மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்ந்தது தெரியவந்தது.

இதையடுத்து மாணவி பிரியங்கா, அவருடைய தாயார் மைனாவதி ஆகியோரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேற்று முன்தினம் பிடித்தனர். பின்னர் அவர்கள், விசாரணைக்காக தேனி சி.பி.சி.ஐ.டி. போலீஸ் அலுவலகத்துக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களிடம் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ராதேவி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையை தொடர்ந்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

நேற்று பிற்பகல் 1.20 மணியளவில் 2 பேரையும் மருத்துவ பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு போலீசார் கொண்டு சென்றனர். அப்போது தாய்-மகளின் முகங்கள் துணியால் மூடப்பட்டிருந்தன. அங்கு அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் மீண்டும் அவர்கள் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

அதன்பிறகு தாயும், மகளும் தேனி ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை வருகிற 25-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு பன்னீர்செல்வம் உத்தரவு பிறப்பித்தார். இதனையடுத்து 2 பேரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதற்கிடையே மாணவி பிரியங்கா கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, அவர் படித்து வந்த சென்னை சவீதா மருத்துவ கல்லூரி முதல்வர் தாமோதரன், மருத்துவ கண்காணிப்பாளர் பொன்னம்பலம் நமசிவாயம் மற்றும் ஒரு பெண் பேராசிரியை ஆகியோர் தேனி சி.பி.சி.ஐ.டி. போலீஸ் அலுவலகத்தில் நேற்று பிற்பகல் 2 மணியளவில் விசாரணைக்கு ஆஜரானார்கள்.

அவர்களிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது மாணவி பிரியங்கா தொடர்பான ஆவணங்களை கல்லூரி முதல்வர் தாக்கல் செய்தார். அவற்றை போலீசார் ஆய்வு செய்தனர். மாணவர் சேர்க்கையின் போது ஆள்மாறாட்டத்தை கவனிக்க தவறியது ஏன்? என்று கேள்வி எழுப்பினர்.

மேலும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு பணியில் ஈடுபட்டவர்களின் பெயர் விவரங்களையும் போலீசார் கேட்டுள்ளனர். 3 மணி நேரத்துக்கும் மேல் இந்த விசாரணை நீடித்தது. விசாரணை முடிந்து மாலை 5.25 மணியளவில் கல்லூரி முதல்வர் உள்பட 3 பேரையும் போலீசார் அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி. போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்டம் நடந்ததை தொடர்ந்து, உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள தேசிய தேர்வு முகமைக்கு (என்.டி.ஏ.) ஒரே பெயர், ஒரே முகவரியில் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் தேர்வு எழுதியவர்கள் விவரங்களை கேட்டு சி.பி.சி.ஐ.டி. தரப்பில் கடிதம் அனுப்பப்பட்டு இருந்தது.

அதன்பேரில், தேசிய தேர்வு முகமை அளித்த தகவலின் பேரில், மாணவி பிரியங்கா சிக்கினார். அவருடைய பெயரில் 2 இடங்களில் தேர்வு எழுதப்பட்டுள்ளது. மாணவியின் தந்தை வக்கீலாக உள்ளார். மாணவியின் தாயார் தான், தனது மகளை டாக்டராக்க ஆசைப்பட்டு இடைத்தரகர் மூலம் பணம் கொடுத்து ஆள்மாறாட்டம் செய்தது தெரியவந்துள்ளது.

அதன் அடிப்படையில் தான் அவருடைய தாயாரும் கைது செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே கைது செய்யப்பட்ட மாணவர்களின் பெற்றோர், ரஷீத் என்ற இடைத்தரகர் மூலம் ஆள்மாறாட்டம் செய்துள்ளனர். இந்த மாணவியும் இடைத்தரகர் ரஷீத் மூலமாகவே ஆள்மாறாட்டம் செய்திருப்பது தெரியவந்துள்ளது. தேசிய தேர்வு முகமை அளித்த தகவலின் பேரில் மேலும் விசாரணை நடந்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

‘நீட்’ தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் மேலும் ஒரு மாணவி தாயாரும் சிக்கியுள்ள தகவல் இந்த வழக்கில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆள்மாறாட்டத்துக்கு காரணமான முக்கிய நபராக கருதப்படும் இடைத்தரகர் ரஷீத்தை பிடிக்க முடியாமல் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தொடர்ந்து திணறி வருகின்றனர். அவர் எங்கு பதுங்கி இருக்கிறார்? என்பதையும் போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை. ரஷீத் சிக்கினால் இந்த வழக்கில் மேலும் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story