கோவையில் புதுவிதமாக கைவரிசை: அழகிகள் போல் வேடம் அணிந்து பணம் பறித்த வாலிபர்கள் சிக்கினர்


கோவையில் புதுவிதமாக கைவரிசை: அழகிகள் போல் வேடம் அணிந்து பணம் பறித்த வாலிபர்கள் சிக்கினர்
x
தினத்தந்தி 13 Oct 2019 4:30 AM IST (Updated: 13 Oct 2019 1:50 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் அழகிகள் போல் வேடம் அணிந்து பணம் பறித்த வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கோவை,

திருப்பூர் பிச்சாம்பாளையத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவருடைய மகன் விக்னேஷ் (வயது 24). எலக்ட்ரீசியன். இவர் கோவை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு படித்தார். மாற்றுச்சான்றிதழ் தொலைந்துவிட்டதால் அதன் நகலை வாங்க கோவை பீளமேட்டில் உள்ள கல்லூரிக்கு வந்தார்.

அவர், பீளமேடு பகுதியில் நடந்து வந்தபோது 2 அழகிகள் வந்து பணம் கேட்டனர். அவர் ரூ.10 கொடுத்தார். இதை வாங்க மறுத்த அழகிகள் திடீரென்று விக்னேசை மிரட்டி ரூ.3 ஆயிரம் பறித்தனர். இதனால் அவர் அழகிகளுடன் வாக்குவாதம் செய்தார். அப்போது அந்த வழியாக ரோந்து வந்த பீளமேடு போலீசார் அழகிகளை மடக்கி பிடித்து விசாரித்தனர்.

அப்போது அவர்கள் தங்களின் பெயர் கனி, ஆனந்தி என்று கூறினர். ஆனால் தொடர்ந்து நடத்திய விசாரணையில், விக்னேஷிடம் பணம் பறித்தது அழகிகள் அல்ல. அழகிகள் போல் வேடம் அணிந்து புதுவிதமான வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர்கள் என்பது போலீசாருக்கு தெரிய வந்தது.

இதையடுத்து பிடிபட்ட 2 பேரையும் பீளமேடு போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் கவுண்டம்பாளையம் டி.வி.எஸ். நகரை சேர்ந்தவர்கள் என்பதும், மணி என்பவர் கனி என்றும், ஆனந்தன் என்பவர் ஆனந்தி என்றும் தங்களது பெயரை மாற்றி, அழகிகள் போல் சேலை மற்றும் நவநாகரிக உடை அணிந்து வாலிபரிடம் பணம் பறித்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.4 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இது போல் நடந்த மற்றொரு சம்பவம் வருமாறு:-

கேரளமாநிலம், பாலக்காட்டை சேர்ந்த சவுகத் அலி என்பவர் கோவை ராம்நகர் பகுதியில் நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த 5 அழகிகள் திடீரென்று, சவுகத் அலியை இடித்து தள்ளினர். பின்னர் அவர்கள் 5 பேரும், சவுகத்அலி தங்களிடம் தகராறு செய்ததாக கூறி பணம் பறிக்க முயன்றனர்.

இது குறித்து சவுகத்அலி கொடுத்த புகாரின் பேரில் காட்டூர் போலீசார் விரைந்து சென்று 5 பேரையும் பிடித்து விசாரித்தனர்.

இதில் அழகிகள் போல் வேடம் அணிந்து பணம் பறிக்க முயன்றது கோவை ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்த விஜய் (21), கேரள மாநிலம் நெம்மாராவை சேர்ந்த ரத்தீஷ் (22), பாலக்காடு அருகே உள்ள கெடும்பசித்தூரை சேர்ந்த மணி (28), சிவகங்கையை சேர்ந்த சச்சின் (21), நாகப்பட்டினத்தை சேர்ந்த கிரியா பியான்ஸ் (25) என்பது தெரிய வந்தது. பணம் பறிப்பதற்காக அவர்கள் 5 பேரும் அழகிகள் போல் வேடம் அணிந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். கைதான 5 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Next Story