காலம் சார்ந்த பதவி உயர்வு வழங்கக்கோரி 4 மாவட்டங்களை சேர்ந்த அரசு டாக்டர்கள் ஆர்ப்பாட்டம்
காலம் சார்ந்த பதவி உயர்வு வழங்கக்கோரி திருவண்ணாமலையில் 4 மாவட்ட அரசு டாக்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் வருகிற 30, 31-ந் தேதிகளில் வேலைநிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்துள்ளனர்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் சார்பில் பொதுக்குழுகூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் வேலூர்,திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய 4 மாவட்டங்களை சேர்ந்த அரசு டாக்டர்கள் கலந்து கொண்டனர்.
இதையடுத்து அவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு மாநில தலைவர் செந்தில் தலைமை தாங்கினார். மாவட்ட அரசு டாக்டர்கள் சங்க தலைவர் ஸ்ரீதரன், செயலாளர் பாலச்சந்தர், பொருளாளர் மணிகண்டபிரபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில இணை செயலாளர் புலிகேசி வரவேற்றார்.
ஆர்ப்பாட்டத்தில், அரசு டாக்டர்களுக்கு காலம் சார்ந்த பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு வழங்கிடவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
பின்னர் மாநில தலைவர் செந்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
எங்களது கோரிக்கையை வலியுறுத்தி நாங்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை அறிவித்துள்ளோம். அதன்படி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. வருகிற 24-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை ஆய்வுக்கூட்டங்கள், மாணவர்களுக்கு வகுப்பெடுத்தல் போன்ற அலுவலக பணிகளில் ஈடுபட மாட்டோம். நோயாளிகளுக்கு சிகிச்சை மட்டும் அளிப்போம்.
அதைத்தொடர்ந்து வருகிற 30, 31-ந் தேதி ஆகிய 2 நாட்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். அன்றைய தினம் அவசரகால சிகிச்சை மட்டும் மேற்கொள்ளப்படும். அதற்கென தனிகுழு அமைக்கப்படும். இந்த போராட்டம் தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது. இதில் அரசு மருத்துவமனை, ஆரம்பசுகாதார நிலையங்கள், மருத்துவக்கல்லூரி உள்பட அனைத்து அரசு டாக்டர்கள் சுமார் 18 ஆயிரம் பேர் கலந்து கொள்ள உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார். அரசு டாக்டர்கள் 30, 31-ந் தேதி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதால் அன்று நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் பாதிப்பு ஏற்படலாம் என கருதப்படுகிறது.
Related Tags :
Next Story