சூளகிரியில் டெங்கு தடுப்பு பணிகளை கலெக்டர் ஆய்வு


சூளகிரியில் டெங்கு தடுப்பு பணிகளை கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 13 Oct 2019 4:15 AM IST (Updated: 13 Oct 2019 3:23 AM IST)
t-max-icont-min-icon

சூளகிரியில் டெங்கு தடுப்பு பணிகளை கலெக்டர் பிரபாகர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

சூளகிரி,

சூளகிரியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு மற்றும் சுகாதார பணிகளை கலெக்டர் பிரபாகர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதையொட்டி சூளகிரி காமராஜர் நகர், தினசரி சந்தை, மேம்படுத்தப்பட்ட அரசு ஆஸ்பத்திரி ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். மேலும் பொதுமக்களிடம் தூய்மை பணிகள் குறித்து கேட்டறிந்தார்.பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- டெங்கு காய்ச்சல் மற்றும் வைரஸ் காய்ச்சல் பாதிப்பை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, கொசு ஒழிப்பு தடுப்பு பணிகள் கிராமப்புறங்கள் மற்றும் நகர்ப்புற பகுதிகளில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தொடர்ந்து கண்காணிப்பு

இதையொட்டி வட்டார மருத்துவ அலுவலர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தலைமையில் பணியாளர்கள் வீடு, வீடாக சென்று குடிநீர் தொட்டி, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் கொசு புழுக்கள் உற்பத்தி தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இதேபோல் நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

தூய்மைப்பணிகள் நடைபெற்று வருவதை, மாவட்ட நிர்வாகமும் தொடர்ந்து கண்காணித்து வருகிறது. போலி டாக்டர்கள் குறித்த புகார்களை, நலப்பணிகள் இணை இயக்குனர் தலைமையில் ஆய்வு மேற்கொண்டு 2 நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மற்ற பகுதிகளிலும் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு, போலி டாக்டர்களை கண்டறிந்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு கலெக்டர் கூறினார்.

இந்த ஆய்வின்போது, சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் பிரியாராஜ் மற்றும் வட்டார மருத்துவ அலுவலர்கள், சுகாதாரத்துறை அலுவலர்கள், தூய்மைப்பணியாளர்கள் உடன் இருந்தனர்.


Next Story