மாநிலம் முழுவதும் 1 ரூபாய் ஆஸ்பத்திரி ரூ.10-க்கு முழு சாப்பாடு சிவசேனா தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி


மாநிலம் முழுவதும் 1 ரூபாய் ஆஸ்பத்திரி ரூ.10-க்கு முழு சாப்பாடு சிவசேனா தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி
x
தினத்தந்தி 13 Oct 2019 5:09 AM IST (Updated: 13 Oct 2019 5:09 AM IST)
t-max-icont-min-icon

10 ரூபாய்க்கு முழு சாப்பாடு, மாநிலம் முழுவதும் 1 ரூபாய் ஆஸ்பத்திரி தொடங்கப்படும் என சிவசேனா தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.

மும்பை,

மராட்டிய சட்டசபை தேர்தல் வருகிற 21-ந் தேதி நடைபெற உள்ளது. இதில் பா.ஜனதா - சிவசேனா கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கின்றன. பா.ஜனதா 164 தொகுதிகளிலும், சிவசேனா 124 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. கூட்டணி அமைந்த போதும் 2 கட்சிகளும் பொதுவான தேர்தல் அறிக்கையை வெளியிடவில்லை.

இந்தநிலையில் சிவசேனா நேற்று தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. பாந்திராவில் உள்ள மாதேஸ்ரீ இல்லத்தில் வைத்து சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே மற்றும் ஆதித்ய தாக்கரே ஆகியோர் ‘வாக்குறுதிகளின் ஆவணம்' என்ற பெயரிலான தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர்.

தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

* மாநிலம் முழுவதும் 1 ரூபாய் ஆஸ்பத்திரி தொடங்கப்படும். இதன் மூலம் பொது மக்கள் ரூ.1 கட்டணமாக செலுத்தி உடல் பரிசோதனை, மருத்துவ சோதனை செய்து கொள்ள முடியும்.

* பொருளாதாரத்தில் பின் தங்கிய விவசாயிகளுக்கு ஆண்டு தோறும் ரூ.10 ஆயிரம் நிவாரண உதவித்தொகை வழங்கப்படும்.

* மாநிலம் முழுவதும் 1,000 இடங்களில் மலிவு விலை உணவகங்கள் திறக்கப்படும். அங்கு மதிய வேளையில் ரூ.10-க்கு முழு சாப்பாடு வழங்கப்படும்.

* வீடுகளில் 300 யூனிட்களுக்கு குறைவாக பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் மின்கட்டணம் 30 சதவீதம் குறைக்கப்படும

* பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களை சேர்ந்த பெண் குழந்தைகளுக்கு கல்லூரியில் இலவச கல்வி அளிக்கப்படும்.

* மாநிலம் முழுவதும் 15 லட்சம் பட்டதாரி இளைஞா்களுக்கு வேலை வாய்ப்பு பயிற்சி அளிக்கப்படும்.

* ஊரகப்பகுதி, கிராமப்புறங்களில் பள்ளி, கல்லூரி மாணவர்களை இலவசமாக அழைத்து செல்ல 2 ஆயிரத்து 500 பஸ் சேவைகள் அறிமுகம் செய்யப்படும்.

* பொருளாதாரத்தில் பின்தங்கிய பார்வை இழந்தவர்கள், மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்ற குழந்தைகள், விவாகரத்தான பெண்கள், கைவிடப்பட்ட பெண்கள், திருநங்கை ஆகியோருக்கு ஓய்வூதிய திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வந்த உதவி தொகை 2 மடங்காக அதிகரிக்கப்படும்.

* கிராமப்புறங்களில் எல்லா சீதோஷணநிலையிலும் தாக்குப்பிடிக்க கூடிய வகையிலான சாலைகள் போடப்படும்.

* ஆன்மீக தலங்கள் அமைந்து உள்ள கிராமப்புற பகுதிகளின் வளர்ச்சி திட்ட பணிகளுக்காக கூடுதல் நிதி ஒதுக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் அறிக்கை வெளியிட்ட பிறகு நிருபர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு உத்தவ் தாக்கரே பதிலளித்து கூறுகையில், ‘‘எல்லா கட்சிகளும் ஆரேகாலனி விவகாரத்தில் தெளிவாக உள்ளன. ஆரேகாலனில் மரங்கள் வெட்டப்படுவதற்கு எதிராக சிவசேனா தொடர்ந்து போராடும். தேர்தல் அறிக்கை விவகாரத்தில் பா.ஜனதா, சிவசேனா கட்சிக்குள் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. கூட்டணி ஆட்சி அமைந்தவுடன் எங்களின் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும். நல்ல திட்டங்களை பா.ஜனதா அறிவித்தால் அதற்கு சிவசேனா ஆதரவு அளிக்கும்’’ என்றார்.

மேலும் உரம், பூச்சிகொல்லி மருந்து மற்றும் விவசாயம் சார்ந்த பொருட்களின் விலை அடுத்த 5 ஆண்டுகளுக்கு அதிகரிக்கப்படாது என ஆதித்ய தாக்கரே கூறினார்.

சிவசேனா அடுத்து மும்பை, விதர்பா போன்ற மண்டலங்களுக்கு தனித்தனி தேர்தல் அறிக்கைகளை வெளியிட உள்ளது. அதில் மும்பை மண்டலத்துக்கான தேர்தல் அறிக்கையில், ஆரேகாலனி வனப்பகுதியாக அறிவிக்கப்படும் என்ற வாக்குறுதி இடம்பெறும் என கூறப்படுகிறது.

Next Story