மதுரை ரெயில் நிலையத்தில் தண்டவாள இணைப்பு பணிக்காக ரெயில்கள் போக்குவரத்தில் மாற்றம்


மதுரை ரெயில் நிலையத்தில் தண்டவாள இணைப்பு பணிக்காக ரெயில்கள் போக்குவரத்தில் மாற்றம்
x
தினத்தந்தி 13 Oct 2019 9:30 PM GMT (Updated: 13 Oct 2019 1:38 PM GMT)

மதுரை ரெயில்நிலையத்தில் தண்டவாள இணைப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் பாசஞ்சர் மற்றும் எக்ஸ்பிரஸ் ரெயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மதுரை,

மதுரை-போடி இடையே அகல ரெயில்பாதை பணிகள் நடந்து வருகிறது. இதில், மதுரை-உசிலம்பட்டி இடையே சுமார் 30 கி.மீ. தூரத்துக்கு பணிகள் முடிவடைந்துள்ளன. அதனை தொடர்ந்து, இந்த அகல ரெயில்பாதை தண்டவாளங்களை மதுரை ரெயில்நிலையத்தில் உள்ள பிளாட்பாரங்களுடன் இணைக்கும் பணி தொடங்க உள்ளது. இதற்காக மதுரை ரெயில்நிலையத்துக்கு வந்து செல்லும் ரெயில்களின் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, நெல்லை-தாம்பரம் எக்ஸ்பிரஸ் ரெயில்(வ.எண்.06002) வருகிற 20-ந் தேதி ரத்து செய்யப்படுகிறது. திண்டுக்கல் ரெயில் நிலையத்திலிருந்து காலை 7.35 மணிக்கு புறப்படும் திண்டுக்கல்-மதுரை பாசஞ்சர் ரெயில் வருகிற 21-ந் தேதி மற்றும் 22-ந் தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது.

மதுரை ரெயில் நிலையத்திலிருந்து மாலை 6.15 மணிக்கு புறப்படும் மதுரை-திண்டுக்கல் பாசஞ்சர் ரெயில் 20-ந் தேதி மற்றும் 21-ந் தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது.

எர்ணாகுளம்-ராமேசுவரம் (வ.எண்.06033) எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 21-ந் தேதி ரத்து செய்யப்படுகிறது. மறுமார்க்கத்தில் ராமேசுவரம்-எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரெயில்(வ.எண்.06034) அன்றையதினம் ரத்து செய்யப்படுகிறது.

நாகர்கோவில் ரெயில் நிலையத்திலிருந்து காலை 7.10 மணிக்கு புறப்படும் கோவை பாசஞ்சர் ரெயில் வருகிற 14-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை கோவில்பட்டி-திண்டுக்கல் இடையே ரத்து செய்யப்படுகிறது.

கோவை ரெயில் நிலையத்திலிருந்து காலை 7.20 மணிக்கு நாகர்கோவில் புறப்படும் பாசஞ்சர் ரெயில் வருகிற 14-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை திண்டுக்கல்-கோவில்பட்டி இடையே ரத்து செய்யப்படுகிறது.

செங்கோட்டை ரெயில் நிலையத்திலிருந்து காலை 11.50 மணிக்கு மதுரை புறப்படும் பாசஞ்சர் ரெயில் வருகிற 14-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை விருதுநகர்-மதுரை இடையே ரத்து செய்யப்படுகிறது.

மதுரை ரெயில் நிலையத்திலிருந்து மாலை 5 மணிக்கு செங்கோட்டை புறப்படும் பாசஞ்சர் ரெயில் வருகிற 14-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை மதுரை-விருதுநகர் இடையே ரத்து செய்யப்படுகிறது.

மதுரை ரெயில் நிலையத்திலிருந்து காலை 7.20 மணி மற்றும் 11.15 மணிக்கு செங்கோட்டை புறப்படும் பாசஞ்சர் ரெயில் வருகிற 18-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை மதுரை-விருதுநகர் இடையே ரத்து செய்யப்படுகிறது.

செங்கோட்டை ரெயில் நிலையத்திலிருந்து காலை 6.35 மணிக்கு மதுரை புறப்படும் பாசஞ்சர் ரெயில் வருகிற 18-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை விருதுநகர்-மதுரை இடையே ரத்து செய்யப்படுகிறது.

செங்கோட்டை ரெயில் நிலையத்திலிருந்து மாலை 3.50 மணிக்கு மதுரை புறப்படும் பாசஞ்சர் ரெயில் வருகிற 17-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை விருதுநகர்-மதுரை இடையே ரத்து செய்யப்படுகிறது.

பாலக்காடு ரெயில் நிலையத்திலிருந்து காலை 4.10 மணிக்கு திருச்செந்தூர் புறப்படும் பாசஞ்சர் ரெயில் வருகிற 14-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை திண்டுக்கல்-நெல்லை இடையே ரத்து செய்யப்படுகிறது.

பாலக்காடு ரெயில் நிலையத்திலிருந்து காலை 4.10 மணிக்கு திருச்செந்தூர் புறப்படும் பாசஞ்சர் ரெயில் வருகிற 22-ந் தேதி கூடல்நகர்-நெல்லை இடையே ரத்து செய்யப்படுகிறது.

பாலக்காடு ரெயில் நிலையத்திலிருந்து காலை 4.10 மணிக்கு திருச்செந்தூர் புறப்படும் பாசஞ்சர் ரெயில் வருகிற 23-ந் தேதி நெல்லை வரை ரத்து செய்யப்படுகிறது. இந்த ரெயில் நெல்லை ரெயில் நிலையத்தில் இருந்து வழக்கமான நேரத்தில் திருச்செந்தூர் புறப்பட்டு செல்லும்.

திருச்செந்தூர் ரெயில் நிலையத்திலிருந்து காலை 11.40 மணிக்கு பாலக்காடு புறப்படும் பாசஞ்சர் ரெயில் வருகிற 14-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை நெல்லை-திண்டுக்கல் இடையே ரத்து செய்யப்படுகிறது. இந்த ரெயில் 15-ந் தேதி மற்றும் 18-ந் தேதிகளில் நெல்லை-மதுரை இடையே ரத்து செய்யப்படுகிறது. 22-ந் தேதி நெல்லை-பாலக்காடு இடையே ரத்து செய்யப்படுகிறது. இந்த ரெயில் 23-ந் தேதி நெல்லை-மதுரை இடையே மட்டும் ரத்து செய்யப்படுகிறது.

ராமேசுவரம் ரெயில் நிலையத்திலிருந்து காலை 11.35 மணிக்கு மதுரை புறப்படும் பாசஞ்சர் ரெயில் வருகிற 20-ந் தேதி மற்றும் 22-ந் தேதிகளில் மானாமதுரை வரை மட்டும் இயக்கப்படும். மறுமார்க்கத்தில் மதுரை ரெயில் நிலையத்திலிருந்து மாலை 6.10 மணிக்கு ராமேசுவரம் புறப்படும் பாசஞ்சர் ரெயில் வருகிற 20-ந் தேதி மற்றும் 22-ந் தேதிகளில் மானாமதுரையுடன் நிறுத்தப்படும்.

ராமேசுவரம் ரெயில் நிலையத்திலிருந்து மாலை 6 மணிக்கு மதுரை புறப்படும் பாசஞ்சர் ரெயில் வருகிற 20-ந் தேதி மற்றும் 21-ந் தேதிகளில் மானாமதுரை வரை இயக்கப்படும். மறுமார்க்கத்தில் மதுரையில் இருந்து காலை 6.45 மணிக்கு ராமேசுவரம் புறப்படும் பாசஞ்சர் ரெயில் ரத்து செய்யப்படுகிறது. அதற்கு பதிலாக இந்த ரெயில் மானாமதுரையில் இருந்து வழக்கமான நேரத்துக்கு ராமேசுவரம் புறப்பட்டு செல்லும்.

ராமேசுவரம் ரெயில் நிலையத்திலிருந்து காலை 5.25 மணிக்கு மதுரை புறப்படும் பாசஞ்சர் ரெயில் வருகிற 21-ந் தேதி மற்றும் 22-ந் தேதி ஆகிய நாட்களில் மானாமதுரை வரை இயக்கப்படும். மறுமார்க்கத்தில் மதுரையில் இருந்து மதியம் 12.15 மணிக்கு ராமேசுவரம் புறப்படும் பாசஞ்சர் ரெயில் வருகிற 21, 22-ந் தேதிகளில் ரத்து செய்யப்பட்டு, அதற்கு பதிலாக மானாமதுரை ரெயில் நிலையத்தில் இருந்து வழக்கமான நேரத்துக்கு ராமேசுவரம் புறப்பட்டு செல்லும்.

பழனி ரெயில் நிலையத்திலிருந்து மாலை 4.45 மணிக்கு மதுரை புறப்படும் பாசஞ்சர் ரெயில் வருகிற 20 மற்றும் 21-ந் தேதிகளில் கூடல்நகர் வரை மட்டும் இயக்கப்படும். மறுமார்க்கத்தில் மதுரை ரெயில் நிலையத்திலிருந்து காலை 7.45 மணிக்கு பழனி புறப்படும் பாசஞ்சர் ரெயில் கூடல்நகர் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும்.

மதுரை ரெயில் நிலையத்திலிருந்து இரவு 11.15 மணிக்கு கேரள மாநிலம் புனலூர் புறப்படும் பாசஞ்சர் ரெயில் வருகிற 20-ந் தேதி விருதுநகர் ரெயில் நிலையத்தில் இருந்து வழக்கமான நேரத்துக்கு புறப்படும். மறுமார்க்கத்தில் புனலூர் ரெயில் நிலையத்திலிருந்து மாலை 3.30 மணிக்கு மதுரை புறப்படும் பாசஞ்சர் ரெயில் வருகிற 20, 21-ந் தேதிகளில் நெல்லை ரெயில் நிலையத்துடன் நிறுத்தப்படும்.

இந்த ரெயில் வருகிற 21-ந் தேதி , 22-ந் தேதிகளில் நெல்லையில் இருந்து புறப்படும்.

விழுப்புரம் ரெயில் நிலையத்திலிருந்து மாலை 3.35 மணிக்கு மதுரை புறப்படும் பாசஞ்சர் ரெயில் வருகிற 20, 21-ந் தேதிகளில் திருச்சி ரெயில் நிலையத்துடன் நிறுத்தப்படும். மறுமார்க்கத்தில், மதுரை ரெயில் நிலையத்தில் இருந்து அதிகாலை 3 மணிக்கு விழுப்புரம் புறப்படும் பாசஞ்சர் ரெயில் 21, 22-ந் தேதிகளில் மதுரைக்கு பதிலாக திருச்சி ரெயில் நிலையத்தில் இருந்து வழக்கமான நேரத்துக்கு விழுப்புரம் புறப்பட்டு செல்லும்.

ஈரோடு ரெயில் நிலையத்திலிருந்து மதியம் 12.35 மணிக்கு நெல்லை புறப்படும் பாசஞ்சர் ரெயில் வருகிற 21, 22-ந் தேதிகளில் ரத்து செய்யப்பட்டு, அதற்கு பதிலாக இந்த ரெயில் விருதுநகர் ரெயில் நிலையத்தில் இருந்து வழக்கமாக புறப்படும் நேரத்துக்கு நெல்லை புறப்பட்டு செல்லும்.

மறுமார்க்கத்தில் நெல்லை ரெயில் நிலையத்திலிருந்து காலை 5.05 மணிக்கு ஈரோடு புறப்படும் பாசஞ்சர் ரெயில் வருகிற 21 ,22-ந் தேதிகளில் விருதுநகர் வரை மட்டுமே இயக்கப்படும்.

மயிலாடுதுறை ரெயில் நிலையத்திலிருந்து காலை 11.25 மணிக்கு நெல்லை புறப்படும் பாசஞ்சர் ரெயில் வருகிற 21, 22-ந் தேதிகளில் திருச்சி-திண்டுக்கல் இடையே ரத்து செய்யப்படுகிறது. மறுமார்க்கத்தில் நெல்லையில் இருந்து காலை 5.30 மணிக்கு மயிலாடுதுறை புறப்படும் பாசஞ்சர் ரெயில் அன்றைய தினம் திண்டுக்கல்-திருச்சி இடையே ரத்து செய்யப்படுகிறது.

தாம்பரம் ரெயில் நிலையத்தில் இருந்து நள்ளிரவு 11.30 மணிக்கு நாகர்கோவில் புறப்படும் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 20, 21-ந் தேதிகளில் திண்டுக்கல் வரை மட்டும் இயக்கப்படும். மறுமார்க்கத்தில், இந்த ரெயில் திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் இருந்து வழக்கமான நேரத்துக்கு தாம்பரம் புறப்பட்டு செல்லும்.

சென்னை-மதுரை தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில்(வ.எண்.22671) வருகிற 21, 22-ந் தேதிககளில் திருச்சி வரை மட்டும் இயக்கப்படும். மறுமார்க்கத்தில் இந்த ரெயில் மதுரையில் இருந்து புறப்படுவதற்கு பதிலாக திருச்சியில் இருந்து வழக்கமான நேரத்துக்கு சென்னை புறப்பட்டு செல்லும்.

திருவனந்தபுரம்-மதுரை அம்ரிதா எக்ஸ்பிரஸ் ரெயில்(வ.எண்.16343) வருகிற 19-ந் தேதி, 21 மற்றும் 22-ந் தேதிகளில் திண்டுக்கல் ரெயில் நிலையத்துடன் நிறுத்தப்படும். மறுமார்க்கத்தில் இந்த ரெயில் 20-ந் தேதி, 21-ந் தேதி மற்றும் 22-ந் தேதிகளில் திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் இருந்து வழக்கமான நேரத்துக்கு புறப்பட்டு செல்லும்.

தாதர்-நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில்(வ.எண்.11021) வருகிற 19-ந் தேதி திண்டுக்கல் ரெயில் நிலையத்துடன் நிறுத்தப்படும். மறுமார்க்கத்தில் இந்த ரெயில்(வ.எண்.11022) வருகிற 21-ந் தேதி திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் இருந்து வழக்கமான நேரத்துக்கு புறப்பட்டு செல்லும்.

திருச்சி-திருவனந்தபுரம் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில்(வ.எண்.22627) வருகிற 21, 22-ந் தேதிகளில் காரைக்குடி, மானாமதுரை, விருதுநகர் வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும்.

மும்பை-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயில்(வ.எண்.16339) வருகிற 20-ந் தேதி கரூர், திருச்சி, காரைக்குடி மற்றும் மானாமதுரை வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும்.

மறுமார்க்கத்தில் நாகர்கோவில்-மும்பை எக்ஸ்பிரஸ் ரெயில்(வ.எண்.16340) வருகிற 21, 22-ந் தேதிகளில் விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி மற்றும் கரூர் வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும்.

திருப்பதி-ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் ரெயில்(வ.எண்.16779) வருகிற 20-ந் தேதி திருச்சி, காரைக்குடி மற்றும் மானாமதுரை வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும்.

மறுமார்க்கத்தில் இந்த ரெயில்(வ.எண்.16780) வருகிற 21-ந் தேதி மானாமதுரை, காரைக்குடி மற்றும் திருச்சி வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும்.

குருவாயூர்-சென்னை எக்ஸ்பிரஸ் ரெயில்(வ.எண்.16128) வருகிற 20-ந் தேதி, 21-ந் தேதிகளில் விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி மற்றும் திருச்சி வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும்.

நாகர்கோவில்-கச்சிகுடா எக்ஸ்பிரஸ் ரெயில்(வ.எண்.16354) வருகிற 22-ந் தேதி விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி மற்றும் திருச்சி வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும்.

கன்னியாகுமரி-ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் ரெயில்(வ.எண்.22662) வருகிற 20-ந் தேதி விருதுநகர், அருப்புக்கோட்டை மற்றும் மானாமதுரை வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும். மறுமார்க்கத்தில் ராமேசுவரம்-கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில்(வ.எண்.22621) வருகிற 21-ந் தேதி மானாமதுரை, அருப்புக்கோட்டை மற்றும் விருதுநகர் வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும்.

Next Story