மயிலாடும்பாறை அருகே, கடமானை வேட்டையாடிய 3 பேருக்கு ரூ.1½ லட்சம் அபராதம்
மயிலாடும்பாறை அருகே கடமானை வேட்டையாடிய 3 பேருக்கு ரூ.1½ லட்சம் அபராதத்தை வனத்துறையினர் விதித்தனர்.
கடமலைக்குண்டு,
மயிலாடும்பாறை அருகே மூங்கிலாறு வனப்பகுதி உள்ளது. இங்கு கடமான்கள், காட்டெருமைகள், வரையாடு உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன. இந்நிலையில் நேற்று முன்தினம் மூங்கிலாறு வனப்பகுதியில் மர்மநபர்கள் சிலர் கடமானை வேட்டையாடி, அதன் இறைச்சியை சமைத்து கொண்டிருப்பதாக கண்டமனூர் வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் பேரில் மூங்கிலாறு வனப்பகுதிக்கு வனத்துறையினர் விரைந்து சென்றனர். பின்னர் வனப்பகுதியில் அவர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது வனப்பகுதியில் கடமான் இறைச்சியை சமைத்து கொண்டிருந்த 3 பேரை சுற்றி வளைத்து பிடித்தனர்.
விசாரணையில் அவர்கள், மயிலாடும்பாறை பகுதியை சேர்ந்த கணேசன் (வயது 40), நாகன் (35), பாலு (38) என்பது தெரியவந்தது. அவர்களிடம் இருந்த 2½ கிலோ கடமான் இறைச்சியை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
பின்பு அவர்களை கண்டமனூர் வனச்சரக அலுவலகத்திற்கு அழைத்து சென்று மேலும் விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் 3 பேரும் கடமானை வேட்டையாடியதை ஒப்புக்கொண்டனர். இதுகுறித்து கண்டமனூர் வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து 3 பேருக்கும் தலா ரூ.50 ஆயிரம் என மொத்தம் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
Related Tags :
Next Story