பவுர்ணமியை முன்னிட்டு அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது


பவுர்ணமியை முன்னிட்டு அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது
x
தினத்தந்தி 13 Oct 2019 10:00 PM GMT (Updated: 13 Oct 2019 5:47 PM GMT)

பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. ஆயிரக்கணக்கானவர்கள் கிரிவலம் சென்றனர்.

திருவண்ணாமலை, 

திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவில் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இந்த கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர். இங்கு உள்ளூர் மட்டுமின்றி வெளிமாவட்டங்கள், வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.

மேலும் கோவிலுக்கு வரும் பக்தர்களில் பெரும்பாலானோர் நகரின் மையப்பகுதியில் உள்ள மலையை சுற்றி 14 கிலோ மீட்டர் தூரம் கிரிவலம் செல்கின்றனர். பவுர்ணமி நாட்களிலும், விசே‌‌ஷ நாட்களிலும் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.

இதில் கார்த்திகை மகா தீபத்தின் போது வரும் பவுர்ணமியன்றும், சித்ரா பவுர்ணமியன்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள். இந்த கோவிலில் விடுமுறை நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும்.

இந்த மாதத்திற்கான பவுர்ணமி நேற்று முன்தினம் நள்ளிரவு 1.20 மணிக்கு தொடங்கியது. பவுர்ணமியையொட்டி நேற்று முன்தினம் இரவில் இருந்தே பக்தர்கள் கிரிவலம் சென்றனர். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை நாள் என்பதாலும், பவுர்ணமி என்பதாலும் கோவிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. கோவிலில் கட்டண தரிசன வழி மற்றும் பொது தரிசன வழியிலும் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

நேற்று பகலில் வெயில் கொளுத்தியது. இருப்பினும் பெரும்பாலான பக்தர்கள் வெயிலில் கிரிவலம் சென்றனர். கிரிவலம் செல்லும் பக்தர்கள் சாலையில் நடந்து செல்ல முடியாமல் மிகவும் அவதிபட்டனர். மாலை சுமார் 5 மணிக்கு மேல் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். விடிய, விடிய ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்ற வண்ணம் இருந்தனர்.

கோவிலிலும், கிரிவலப் பாதையிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். பவுர்ணமி இன்று (திங்கட்கிழமை) அதிகாலை சுமார் 2.15 மணிக்கு முடிவடைந்தது.

Next Story