கரூரில் வாழ்ந்த சமண முனிவர்களுக்கு மலையை குடைந்து படுக்கை அமைத்து கொடுத்த வரலாறு


கரூரில் வாழ்ந்த சமண முனிவர்களுக்கு மலையை குடைந்து படுக்கை அமைத்து கொடுத்த வரலாறு
x
தினத்தந்தி 14 Oct 2019 4:15 AM IST (Updated: 13 Oct 2019 11:43 PM IST)
t-max-icont-min-icon

கரூரில் வாழ்ந்த சமண முனிவர்களின் பாதுகாப்புக்காக மலையை குடைந்து படுக்கை அமைத்து கொடுத்துள்ளனர். ஆறுநாட்டார்மலை என அழைக்கப்படுகிற அதில் சேரர்களை பற்றிய தகவல்கள் புலப்படுகின்றன.

கரூர்,

சேர, சோழ, பாண்டியர்கள், விஜயநகர பேரரசர்கள், மைசூர் மன்னர்கள் உள்ளிட்டோர் கரூரை முக்கிய வணிகத்தலமாக கொண்டு அந்த காலத்தில் ஆட்சி செய்த சிறப்பு உண்டு. அதற்கு ஆதாரமாக கரூர் அமராவதி ஆற்றங்கரையில் ரோமானிய நாணயங்கள் உள்ளிட்ட வெளிநாட்டு நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டன. மேலும் கொங்கு மண்டலத்துக்கு உட்பட்ட கரூர் நகரானது கைத்தறி நகரம் என தொழில் ரீதியாகவும், மாமன்னர் ராஜராஜசோழனுக்கு ஆலோசகராக விளங்கிய சித்தர் கருவூரார் உள்ளிட்டோர் வாழ்ந்த இடம் மற்றும் பிரம்மன் தனது படைப்பு தொழிலை தொடங்கிய இடம் என்பதாலும் ஆன்மிக ரீதியாகவும், பல்வேறு போர்களை கண்டிருப்பதால் வரலாற்று ரீதியாகவும் சிறப்பு வாய்ந்த இடம் கரூர் ஆகும். அதோடு இலக்கியங்களிலும், கல்வெட்டுகளிலும் கரூரானது “வஞ்சி நகர்” என குறிப்பிடப்படுகிறது. இதனால் முன்பு சேரர்களின் தலைநகராக விளங்கியது தெரிகிறது.

புகழிமலை சமணர் படுக்கை

இந்தியாவின் வரலாற்றினை வடித்தெடுக்க பேருதவியாக இருக்கக்கூடிய முக்கிய சான்றுகளில் கல்வெட்டுகள் பிரதான இடத்தை பிடிக்கின்றன. மன்னர்கள் ஆட்சி செய்த காலம், மக்களின் வாழ்க்கை முறை உள்ளிட்டவை பற்றி கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டுள்ளதால் அந்த காலத்தில் அரங்கேறிய நிகழ்வுகளின் தொகுப்பாகவும் அவை திகழ்கின்றன. அந்த வகையில் கரூர் சேரர்களின் தலைநகராக விளங்கியது குறித்தும், சங்ககாலத்தை கணிக்கக்கூடிய ஆதாரமாகவும், சமண முனிவர்களுக்கு மலை குகையில் படுக்கை அமைத்து கொடுக்கப்பட்டது குறித்து கரூர் அருகே புகழிமலையில் உள்ள புகளூர் ஆறுநாட்டார் மலை கல்வெட்டு குறிப்பிடுகிறது. அந்த மலையில் முருகன் கோவில் உள்ளபோதும் கூட, மேற்புறத்திலுள்ள சமணர் படுக்கைகளை காண வரலாற்று ஆர்வலர்கள் பல்வேறு மாவட்டம் மற்றும் மாநிலங்களில் இருந்து கரூருக்கு வந்து குறிப்புகளை சேகரித்து செல்கின்றனர். முன்பிருந்த கொங்கு 24 நாடுகளில் மணநாடு, தலையநாடு, தட்டையநாடு, கிழங்கு நாடு, வெங்கலநாடு, வாழவந்தி நாடு ஆகிய ஆறுநாட்டவர்களும் குலதெய்வமாக இந்த மலை மீதுள்ள முருகபெருமான் விளங்கியதால் ஆறுநாட்டார் மலை (புகழிமலை) என பெயர்க்காரணம் வந்ததாக கூறப்படுகிறது. தற்போது அங்குள்ள சமணர் படுக்கைகள் மற்றும் கல்வெட்டுகள் ஆகிய தொல்லியல் துறை கட்டுப்பாட்டின்கீழ் பராமரிக்கப்பட்டு வருகிறது.

தமிழ் பிராமி எழுத்துக்களில் கல்வெட்டுகள்

புகளூர் ஆறுநாட்டார் மலை கல்வெட்டுகள் குறித்தும், சமண முனிவர்களுக்கு அந்த மலையில் படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டது குறித்தும் கரூர் தாந்தோன்றிமலை அரசு கலைக்கல்லூரி முன்னாள் வரலாற்றுத்துறை தலைவர் ம.ராச சேகரதங்கமணியிடம் கேட்ட போது கூறியதாவது:-

சங்க காலத்தில் சேரமன்னர்கள் கரூரை ஆண்ட போது, சமணர்களை ஆதரித்தனர். சமண முனிவர்கள் தங்குவதற்காக சேர மன்னர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் சார்பில் தான் புகழிமலையினை குடைந்து படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. தான் இளவரசு பட்டம் பெற்றதன் நினைவாக மூத்த சமண முனிவரான ஆத்தூரை சேர்ந்த செங்காயபனுக்கு சேர மன்னர் இளங்கடுங்கோ படுக்கை அமைத்தது குறித்து கல்வெட்டில் புலப்படுகின்றன. சேரர்களின் வரலாற்றை கூறும் பதிற்றுப்பத்து நூல்களில் இவை இடம்பெறுகின்றன. இதைத்தவிர கரூரில் அந்த காலத்திலேயே தங்க நகை ஆபரணம் செய்யும் தொழில் சிறப்புற நடந்ததை சுட்டி காட்டும் விதமாக, பொன் வியாபாரி நத்தி என்பவர் அமைத்து கொடுத்த சமணர் படுக்கையின் மூலமும், கல்வெட்டிலும் தெரிகின்றன. ஆறுநாட்டார் மலையில் மொத்தம் 12 கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றில் உள்ள எழுத்துக்கள் பழந்தமிழி என அழைக்கப்படுகிற தமிழ் பிராமி வகை எழுத்து வரிவடிவங்களில் பொறிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது ஆகும். இதனால் இந்த கல்வெட்டின் தொன்மை என்பது மிகுந்த சிறப்புக்குரியதாகும்.

வரலாற்றை ஆவணப்படுத்த...

செல்வகடுங்கோ வாழியாதன், பெருஞ்சேரர் இரும்பொறை, இளஞ்சேரர் இரும்பொறை உள்ளிட்டோர் ஆட்சி புரிந்தது குறித்தும், கரூரை முக்கிய வணிக தலமாக கொண்டு சேரர்கள் ஆண்டது குறித்தும் கல்வெட்டுகள் ஆவணப்படுத்துகின்றன. இதே போல் சுக்காலியூர் உள்ளிட்ட இடங்களிலும் சமணர் படுக்கைகள் இருக்கின்றன. ஆனால் அதில் கல்வெட்டு தகவல் கிடைக்கப்பெறவில்லை. இவ்வாறு அவர் கூறினார். புகளூர் ஆறுநாட்டார் மலை கல்வெட்டு, சமணர் படுக்கைகள் குறித்து கரூர் ஜவகர் பஜாரில் உள்ள அகழ் வைப்பகத்தில் புகைப்பட ஆதார தகவல்கள் இருக்கின்றன. எனினும் புகழிமலை சமணர் படுக்கையை சுற்றுலாதலமாக மாற்றி அதன் பெருமையை அனைவரும் அறிந்து கொள்ள வழிவகை செய்ய வேண்டும். மேலும் அது பற்றிய ஆதார பூர்வமான தகவலை திரட்டி தொகுத்து பொதுமக்களும் அறிந்து கொள்ளும்படி வரலாற்றினை ஆவணப்படுத்திட நடவடிக்கை எடுக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என வரலாற்று ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.


Next Story