கூடலூர் வனப்பகுதியில், வண்ணத்துப்பூச்சிகள் எண்ணிக்கை அதிகரிப்பு - சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மகிழ்ச்சி


கூடலூர் வனப்பகுதியில், வண்ணத்துப்பூச்சிகள் எண்ணிக்கை அதிகரிப்பு - சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 13 Oct 2019 10:30 PM GMT (Updated: 13 Oct 2019 7:00 PM GMT)

கூடலூர் வனப்பகுதியில் வண்ணத்துப்பூச்சிகள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. இதனால் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

கூடலூர்,

மேற்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாக நீலகிரி மாவட்டம் உள்ளது. இது அரிய வகை தாவரங்கள், வனவிலங்குகள், விலை உயர்ந்த மரங்கள், பசுமை போர்த்திய பள்ளத்தாக்குகள் என இயற்கை அன்னை தாலாட்டும் இடமாக விளங்குகிறது. கேரளா முதல் கூடலூர், கர்நாடகா மாநிலம் பந்திப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வரை காட்டு யானைகள், புலிகள், கரடிகள், செந்நாய்கள், காட்டெருமைகள், மான்கள் என வனவிலங்குகளின் வாழ்விடங்கள் உள்ளன.

நீலகிரி மாவட்டமும், கேரளா-கர்நாடகா மாநிலங்கள் இணையும் மையத்தில் கூடலூர் வனப்பகுதி உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஜூன் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை கூடலூர் பகுதியில் மழை பெய்து வருகிறது. கடந்த 2 ஆண்டுகளாக மழையின் தாக்கம் அதிகமாக உள்ளது. கடந்த ஆகஸ்டு மாதம் பெய்த கனமழையில் வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டது. தற்போது மழை குறைந்து பொதுமக்களின் இயல்பு நிலை திரும்பி உள்ளது.

கூடலூர் வனப்பகுதியில் சிறுவன உயிரினங்கள் அதிகளவு வாழ்ந்து வருகின்றன. குறிப்பாக ராஜநாகம் அதிகளவில் உள்ளது. இதேபோன்று தட்டாம்பூச்சி, வண்ணத்துப்பூச்சிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து உள்ளது. விவசாய நிலங்கள், வயல்வெளிகள், வனப்பகுதிகளில் வண்ணத்துப்பூச்சிகள் கூட்டம், கூட்டமாக பறக்கின்றன. இனப்பெருக்கத்தின் மூலம் வண்ணத்துப்பூச்சிகள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். கூடலூர் பகுதியில் சுற்றுச்சூழல் மேம்பட்டுள்ளதால் வண்ணத்துப்பூச்சிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இதேபோல் கூடலூர் அருகே நாடுகாணி பொன்னூரில் தோட்டக்கலைத்துறை பூங்காவிலும் வண்ணத்துப்பூச்சிகள் வரத்து அதிகரித்து உள்ளது.இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர். இதுகுறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறியதாவது:-

பொதுவாக வண்ணத்துப்பூச்சிகளை அனைவருக்கும் பிடிக்கும். 20 ஆயிரம் வரை வண்ணத்துப்பூச்சிகள் உள்ளதாக கண்டறியப்பட்டு உள்ளது. லெப்பிடோப்டரா என்ற அறிவியல் பெயர் கொண்ட வண்ணத்துப்பூச்சிகள் பல வகைகளாக உள்ளன. இதில் விட்டில் பூச்சிகள் என அழைக்கப்படும் மாத் வகைகளும் உள்ளது. இதன் இறக்கைகள் பாம்பு கண்களை போல் காணப்படும். கூடலூர் வனப்பகுதியில் மோனார்க் வகை வண்ணத்து பூச்சிகள் அதிகளவில் காணப்படுகின்றன. வண்ணத்துப்பூச்சிகளின் பெருக்கத்தை காணும் போது சுற்றுச்சூழல் மேம்பாடு அடைந்து உள்ளதை காட்டுகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story