தேனாம்பேட்டையில் கணவரால் தீ வைத்து எரிக்கப்பட்ட இளம்பெண் பரிதாப சாவு; கொலை வழக்காக மாற்றம்


தேனாம்பேட்டையில் கணவரால் தீ வைத்து எரிக்கப்பட்ட இளம்பெண் பரிதாப சாவு; கொலை வழக்காக மாற்றம்
x
தினத்தந்தி 13 Oct 2019 11:00 PM GMT (Updated: 13 Oct 2019 7:09 PM GMT)

சென்னை தேனாம்பேட்டையில் கணவரால் தீ வைத்து எரிக்கப்பட்ட இளம்பெண் ஆஸ்பத்திரியில் பரிதாபமாக இறந்து போனார். இதனால் இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது.

சென்னை,

சென்னை தேனாம்பேட்டை எல்லையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜீவமணி (வயது 36). ஆட்டோ டிரைவர். இவருடைய மனைவி லட்சுமி (26). இவர் பலத்த தீக்காயத்துடன் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.அவர், எனது கணவர் தான் என்னை தீ வைத்து கொளுத்தினார் என்று டாக்டர்களிடம் வாக்குமூலம் கொடுத்தார். இதுதொடர்பாக தேனாம்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

உதவி கமிஷனர் கோவிந்தராஜ் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் ரமேஷ் விசாரணை நடத்தினார். விசாரணையில், லட்சுமியின் நடத்தையில் சந்தேகப்பட்டு, ஜீவமணி தான் அவரை எரித்தது தெரிய வந்தது. இதையடுத்து கொலை முயற்சி வழக்கின் கீழ் அவர் கைது செய்யப்பட்டார்.

லட்சுமி ஏற்கனவே திருமணம் ஆனவர். முதல் கணவருக்கு பிறந்த ஒரு குழந்தை உள்ளது. முதல் கணவரை பிரிந்து அவர் 2-வதாக ஜீவமணியை திருமணம் செய்து உள்ளார் என்றும் போலீசார் தெரிவித்தனர். ஜீவமணி மூலமும் லட்சுமிக்கு ஒரு குழந்தை உள்ளது.

லட்சுமி கீழ்ப்பாக்கம் ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். நேற்று அவர் பரிதாபமாக இறந்து போனார்.

லட்சுமி இறந்ததையொட்டி இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது. கைதான ஆட்டோ டிரைவர் ஜீவமணி மீதும் கொலை குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ஆனால் ஜீவமணி போலீஸ் விசாரணையின்போது, நான் லட்சுமியை தீ வைத்து எரிக்கவில்லை என்றும், அவரே தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார் என்றும் தெரிவித்துள்ளார்.

லட்சுமி கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் தான் ஜீவமணி மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.

Next Story