வேலூரில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 5 டன் ரேஷன் அரிசி பறிமுதல் - 2 பேர் கைது


வேலூரில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 5 டன் ரேஷன் அரிசி பறிமுதல் - 2 பேர் கைது
x
தினத்தந்தி 14 Oct 2019 3:45 AM IST (Updated: 14 Oct 2019 1:00 AM IST)
t-max-icont-min-icon

வேலூரில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 5 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

வேலூர், 

வேலூர் பறக்கும்படை தாசில்தார் சரவணன் மற்றும் குழுவினர் நேற்று முன்தினம் மாலை ஆரணி சாலையில் வாகனத்தில் சென்றனர். அப்போது அதே சாலையில் வாலிபர் ஒருவர் மொபட்டில் அரிசி மூட்டைகளை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தார். அந்த வாலிபர் மீது சந்தேகம் அடைந்த தாசில்தார் மற்றும் குழுவினர் மொபட்டை ரகசியமாக பின்தொடர்ந்து சென்றனர்.

வேலூர் சாய்நாதபுரத்தில் உள்ள வீட்டின் முன்பு மொபட் நின்றது. வாகனத்தை சிறிது தூரத்தில் நிறுத்தி விட்டு அதிகாரிகள் வீட்டின் அருகே நடந்து சென்றனர். அதிகாரிகளை கண்டதும் அந்த வாலிபர் மற்றும் வீட்டில் இருந்து மற்றொருவர் என 2 பேர் அங்கிருந்து தப்பியோடினர்.

அதைத்தொடர்ந்து அதிகாரிகள் அந்த வீட்டில் சோதனையிட்டனர். அங்குள்ள அறைகளில் ஏராளமான மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தன. அவற்றை அதிகாரிகள் பிரித்து பார்த்தனர். அதில், ரேஷன் அரிசி இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அதிகாரிகள் அங்கிருந்த 105 மூட்டைகளில் வைக்கப்பட்டிருந்த 5,235 கிலோ (5 டன்) ரேஷன்அரிசியை பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து அவற்றை அதிகாரிகள் வேலூர் நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைத்தனர். மேலும் இதுகுறித்து உணவு கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் முத்தமிழ் மற்றும் போலீசார் அந்த வீட்டிற்கு சென்று பார்வையிட்டு, அருகே வசிப்பவர்களிடம் விசாரித்தனர்.

அதில், பலவன்சாத்து குப்பத்தை சேர்ந்த தாமு என்ற தாமோதரன் (வயது 55), வேலூர் டோல்கேட் முத்தண்ணாநகரை சேர்ந்த வினோத்குமார் (32) ஆகியோர் ரேஷன் அரிசியை மூட்டைகளில் பதுக்கி வைத்து வேறு மாநிலங்களுக்கு விற்பனை செய்ய முயன்றது தெரியவந்தது. இதற்கிடையே தாமோதரன், வினோத்குமார் வேலூர் புதிய பஸ்நிலையத்தில் நின்று கொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று 2 பேரையும் கைது செய்தனர்.

Next Story