கருங்கல் அருகே தங்க புதையல் விவகாரம்: போலீசார் உதவியுடன் வாலிபரை கடத்திய 7 பேர் மீது வழக்கு


கருங்கல் அருகே தங்க புதையல் விவகாரம்: போலீசார் உதவியுடன் வாலிபரை கடத்திய 7 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 13 Oct 2019 10:15 PM GMT (Updated: 13 Oct 2019 9:38 PM GMT)

கருங்கல் அருகே தங்க புதையல் கிடைத்ததாக கருதிபோலீசார் உதவியுடன்வாலிபரை கடத்திய விவகாரத்தில் 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த விவகாரத்தில் மேலும் பல முக்கிய பிரமுகர்கள் சிக்குவார்கள் என்ற பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.

கருங்கல்,

கருங்கல் அருகே பாலப்பள்ளம் குட்டி சரல்விளையைச் சேர்ந்தவர் ஜெர்லின்(வயது 24), பொக்லைன் எந்திர டிரைவர்.

கடந்த சில மாதங்களுக்கு முன் ஜெர்லின் திடீரென 3 சொகுசு கார்கள், 3 பொக்லைன் எந்திரங்களை வாங்கி தொழில் செய்தார். இதனால், சந்தேகமடைந்த ஜெர்லினின் நண்பர் இதுபற்றி கேட்டபோது, தனக்கு தங்க புதையல் கிடைத்ததாக கூறினார்.

இதை நண்பர் மூலம் மோப்பம் பிடித்த கருங்கல் போலீசார் 2 பேர் கடந்த 7-ந்தேதி சில ரவுடிகளுடன் சேர்ந்து ஜெர்லினின் வீட்டுக்கு சென்றனர். பின்னர், அவரிடம் மான் கறி சாப்பிட்டால் உடலுக்கு நல்லது என்று கூறி ஜெர்லினை அவரது காரில் வள்ளியூர் அருகே கம்பளம்பாடு பகுதியில் உள்ள ஒரு தோட்டத்துக்கு கடத்திச் சென்றனர்.

பத்திரத்தில் கையெழுத்து

அங்கு, அவரிடம் தங்க புதையல் பற்றி கேட்டு அடித்து சித்ரவதை செய்தனர். மேலும், வெள்ளை பேப்பர் மற்றும் வெற்று பத்திரத்திலும் கையெழுத்து வாங்கி விட்டு, அவர் அணிந்திருந்த 7½ பவுன் நகையை பறித்தனர்.

பின்னர், அந்த கும்பல் அவரை கருங்கல் அழைத்துச் சென்று அவரது வீட்டில் இருந்த டி.வி. உள்ளிட்ட பொருட்களை தூக்கிச் சென்றதோடு, ஜெர்லினின் 2 கார்களையும் கொண்டு சென்றனர்.

அப்போது, அவர்களிடம் இருந்து தப்பிய ஜெர்லின் குளச்சல் உதவி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு சென்று நடந்த சம்பவத்தை கூறி புகார் அளித்தார்.

7 பேர் மீது வழக்கு

இதுகுறித்து குளச்சல் உதவி போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டது. மேலும், இச்சம்பவத்தில் ஈடுபட்ட 2 போலீஸ்காரர்களும் பணியிடமாற்றம் செய்யப்பட்டனர்.

தனிப்படையினர் நடத்திய விசாரணையில், ஜெர்லினை கடத்த போலீஸ்காரர்களுக்கு உதவியது, உதயமார்த்தாண்டம் பூம்பாறவிளையைச் சேர்ந்த ெஜகன் என்ற ஜெயராஜன், கப்பியறை வேளாங்கோட்டுவிளையைச் சேர்ந்த ஸ்டாலின் என்ற ஜெயஸ்டாலின், மேக்காமண்டபம் கடலைக்குன்று பகுதியைச் சேர்ந்த சுரேஷ்குமார், புத்தளத்தை சேர்ந்த சகோதரர்களான ராஜா அருள்சிங், ராஜா அஸ்வின், வெட்டூர்ணிமடம் பள்ளிவிளையைச் சேர்ந்த ஜெரின்ராபி, கிருஷ்ணகுமார் என்பது தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து ஜெகன் உள்பட 7 பேர் மீது சப்-இன்ஸ்பெக்டர் ரெகுபாலாஜி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

ெநருங்கிய தொடர்பு

மேலும், இந்த கடத்தல் கும்பலில் உள்ள ஒருவருக்கும் தனிப்படையின் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ள பெண் இன்ஸ்பெக்டருக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், தீவிர படுத்தப்பட்டுள்ள இந்த விசாரணையில் மேலும் சில முக்கிய பிரமுகர்கள் சிக்குவார்கள் என கூறப்படுகிறது.


Next Story