குமரியில் தொடர் மழைக்கு 2 வீடுகள் இடிந்தன திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது


குமரியில் தொடர் மழைக்கு 2 வீடுகள் இடிந்தன திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது
x
தினத்தந்தி 13 Oct 2019 11:00 PM GMT (Updated: 13 Oct 2019 9:48 PM GMT)

குமரி மாவட்டத்தில் தொடர் மழைக்கு 2 வீடுகள் இடிந்தன. திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து அவ்வப்போது மழை பெய்து வருகிறது. அதிலும் மேற்கு மாவட்ட பகுதிகளில் சற்று பலத்த மழை பெய்கிறது. இதே போல நேற்று முன்தினம் இரவும் குலசேகரம், குழித்துறை, தக்கலை, பேச்சிப்பாறை உள்ளிட்ட இடங்களில் பலத்த மழை பெய்தது.

நாகர்கோவில் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று காலை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. மதியம் 12.30 மணிக்கு மேல் வானில் கருமேகங்கள் சூழ்ந்ததோடு லேசாக மழை பெய்தது. குமரி மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேர மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

அணைகளுக்கு நீர்வரத்து

பூதப்பாண்டி-10.2, களியல்-2.2, கன்னிமார்-24.2, குழித்துறை-43.2, நாகர்கோவில்-4, புத்தன்அணை-13.4, சுருளோடு-13.4, தக்கலை-33.2, கோழிப்போர்விளை-7, அடையாமடை-9, முள்ளங்கினாவிளை-12, ஆனைகிடங்கு-28.2 என்ற அளவில் மழை பெய்திருந்தது. இதே போல அணைப்பகுதிகளில் பேச்சிப்பாறை-4.6, பெருஞ்சாணி-14.4, சிற்றார் 1-2, மாம்பழத்துறையாறு-22, முக்கடல்-27.2 என்ற அளவில் மழை பெய்திருந்தது.

மழை காரணமாக அணைகளுக்கு தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. பேச்சிப்பாறை அணைக்கு நேற்று காலை நிலவரப்படி 204 கனஅடி தண்ணீர் வந்தது. மேலும் ெபருஞ்சாணி அணைக்கு 214 கனஅடியும், சிற்றார் 1 அணைக்கு 220 கனஅடியும், சிற்றார் 2 அணைக்கு 38 கனஅடியும், மாம்பழத்துறையாறு அணைக்கு 10 கனஅடியும், முக்கடல் அணைக்கு 2 கனஅடியும் தண்ணீர் வந்தது. அதே சமயம் ெபருஞ்சாணி அணையில் இருந்தும், சிற்றார் 1 அணையில் இருந்தும் தலா 200 கனஅடி தண்ணீர் பாசனத்துக்கு திறந்துவிடப்பட்டு உள்ளது. அதோடு குளங்களுக்கும் தண்ணீர் வந்துகொண்டு இருக்கிறது.

2 வீடுகள் இடிந்தன

குலசேகரத்தில் பலத்த மழை காரணமாக 2 வீடுகள் இடிந்தன. அதாவது கான்வென்ட் சந்திப்பு பகுதியில் ஓட்டு வீட்டில் வசிப்பவர் புஷ்பராஜ் (வயது 53). இவரது வீட்டு சுவர் நேற்று காலை திடீரென இடிந்து அருகே பிரான்சிஸ் என்பவர் வீட்டின் மீது விழுந்தது. இதனால் பிரான்சிஸ் வீட்டு சுவரும் இடிந்தது. இந்த சம்பவத்தின் போது 2 வீடுகளிலும் ஆட்கள் இல்லாததால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

குமரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இதனால் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. திற்பரப்புக்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள் அருவியில் குளித்தும், படகு சவாரி செய்தும் மகிழ்ந்தனர். 

Next Story