தமிழகத்தில் 3 ஆயிரம் பேர் டெங்கு காய்ச்சலால் பாதிப்பு பொது சுகாதாரத்துறை இயக்குனர் பேட்டி


தமிழகத்தில் 3 ஆயிரம் பேர் டெங்கு காய்ச்சலால் பாதிப்பு பொது சுகாதாரத்துறை இயக்குனர் பேட்டி
x
தினத்தந்தி 13 Oct 2019 11:00 PM GMT (Updated: 13 Oct 2019 10:10 PM GMT)

தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை 3 ஆயிரம் பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் குழந்தைசாமி தெரிவித்துள்ளார்.

தர்மபுரி,

தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் குழந்தைசாமி, நேற்று தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் முதல்மாடி மற்றும் 2-வது மாடியில் உள்ள சிறப்பு காய்ச்சல் வார்டுகளில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை நேரில் சந்தித்து சிகிச்சை முறை குறித்து கேட்டறிந்தார். பின்னர் அவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகள் குறித்து அவர் டாக்டர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் குழந்தைசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

டெங்கு உள்ளிட்ட அனைத்து வகையான காய்ச்சல் பரவுவதை தடுக்க தமிழக அரசு போர்க்கால நடவடிக்கை எடுத்து வருகிறது. தர்மபுரி அரசு மருத்துவமனையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர்கள் 220 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தர்மபுரி, கிரு‌‌ஷ்ணகிரி, திருப்பத்தூர் ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் இங்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் கொசு ஒழிப்பு பணியில் தீவிரமாக பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இன்னும் ஒருவாரத்தில் காய்ச்சலின் தாக்கம் படிப்படியாக குறையும்.

மாத்திரைகள்

காய்ச்சல், மூட்டுவலி உள்ளவர்கள் அருகில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனைகளை அணுகி சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும். மருத்துவர் ஆலோசனை இல்லாமல் கடையில் மாத்திரை வாங்கி சாப்பிட கூடாது. தண்ணீர், நிலவேம்பு கசாயம் மற்றும் நீர் ஆதாரம் உள்ள உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும்.

தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் காய்ச்சல் பிரிவு 24 மணி நேரமும் இயங்கி வருகிறது. காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்கின்றனர். தமிழகத்தில் தேவையான மருந்துகள், மாத்திரைகள் இருப்பு உள்ளன.

தாக்கம் அதிகம்

தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை 3 ஆயிரம் பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக தர்மபுரி, கிரு‌‌ஷ்ணகிரி, வேலூர், காஞ்சீபுரம், திருவள்ளூர், கடலூர், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் டெங்கு காய்ச்சலின் தாக்கம் அதிகம் இருந்தது. இன்றைய நிலவரத்தில் தமிழக மருத்துவமனைகளில் 100 முதல் 150 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தர்மபுரி அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 3 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் 3 பேர் இறந்துள்ளனர். டெங்கு பாதிப்பு உள்ளவர்கள் சிகிச்சை பெற்று குணமாகி வீட்டிற்கு திரும்பி செல்கின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது அரசு மருத்துவமனை சூப்பிரண்டு சிவக் குமார், சுகாதாரத்துறை துணை இயக்குனர் (பொறுப்பு) செல்வகுமார், மற்றும் உதவி உள்ளிருப்பு மருத்துவ அலுவலர்கள் சந்திரசேகர், சதீ‌‌ஷ்பாபு உள்பட பலர் உடனிருந்தனர்.


Next Story