முல்லைப்பெரியாறு அணையில் திறக்கும் தண்ணீர் அளவு குறைப்பு: கல்லூரி மாணவரை 3-வது நாளாக தேடும் பணி தீவிரம்
முல்லைப்பெரியாறு அணையில் திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டது. இதையடுத்து 3-வது நாளாக கல்லூரி மாணவரை தேடும் பணியில் தீயணைப்புத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
உத்தமபாளையம்,
உத்தமபாளையம் ஆர்.சி.தெருவை சேர்ந்தவர் மாத்யூ. இவரது மகன் பிரவீன்குமார் (வயது 18). இவர் வீரபாண்டி அருகே உள்ள கோட்டூர் அரசு கலைக்கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர் கடந்த 11-ந்தேதி காலையில் தனது நண்பர் தேவாரத்தை சேர்ந்த கதிரவன் என்பவருடன் உத்தமபாளையம் முல்லைப்பெரியாற்றில் குளிக்க சென்றார்.
அப்போது அவர் தண்ணீரில் இழுத்து செல்லப்பட்டார். தகவலறிந்த உத்தமபாளையம் போலீசாரும், தீயணைப்பு படையினரும் முல்லைப்பெரியாற்றில் பிரவீன்குமாரை தேடும் பணியில் ஈடுபட்டனர். அவர் கிடைக்கவில்லை. அணையில் இருந்து வினாடிக்கு 1,400 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டிருந்ததால், தண்ணீர் வேகம் அதிகமாக இருந்ததால் பிரவீன் குமாரை தேடும் பணியில் பின்னடைவு ஏற்பட்டது. இதனை கண்டித்து அவரது உறவினர்கள் உத்தமபாளையத்தில் சாலை மறியலில் நேற்று முன்தினம் ஈடுபட்டனர்.
இதையடுத்து மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் உத்தரவின்பேரில் முல்லைப்பெரியாறு அணையில் இருந்து திறக்கும் தண்ணீர் அளவு வினாடிக்கு 100 கனஅடியாக குறைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஆற்றில் தண்ணீரின் வேகம் குறைந்தது. நேற்று 3-வது நாளாக மாவட்ட தீயணைப்பு அதிகாரி மணிகண்டன் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள், உத்தமபாளையம் போலீஸ் துணை சூப்பிரண்டு சின்னகண்ணு தலைமையில் 10-க்கும் மேற்பட்ட போலீசார் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
அவர்கள் உத்தமபாளையம், சின்னமனூர், எல்லப்பட்டி தடுப்பணை, குச்சனூர் ஆகிய பகுதிகள் வரை ஆற்றில் தேடி சென்றனர். மாலை 6 மணி வரை தேடியதில் பிரவீன்குமார் கிடைக்கவில்லை. இதேபோல் முல்லைப்பெரியாற்றின் கரையோர பகுதிகளில் வருவாய்த்துறையினரும் கண்காணிப்பு பணியில் ஈடுபட உத்தமபாளையம் தாசில்தார் உதயராணி உத்தரவிட்டுள்ளார்.
Related Tags :
Next Story