அடிக்கடி ரெயில் போக்குவரத்தில் மாற்றம் செய்வதால் பயணிகளுக்கு பாதிப்பு
மதுரை கோட்டத்தில் பராமரிப்பு மற்றும் சீரமைப்பு பணிகள் என கூறி அடிக்கடி ரெயில் போக்குவரத்தில் மாற்றம் செய்வதால் பயணிகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் முறையான திட்டமிடல் இல்லாததே இதற்கு காரணம் என புகார் கூறப்படுகிறது.
விருதுநகர்,
மதுரை கோட்ட ரெயில்வே நிர்வாகம் ரெயில்பாதை பராமரிப்பு பணி, சீரமைப்பு பணிகள் எனக்கூறி மதுரையில் இருந்து இயக்கப்படும் பல பயணிகள் ரெயில் போக்குவரத்தில் மாற்றம் செய்து வருகிறது. குறிப்பாக மதுரையில் இருந்து செங்கோட்டை செல்லும் பயணிகள் ரெயில் விருதுநகர்-மதுரை இடையே அடிக்கடி ரத்து செய்யப்படுகிறது. இதே போன்று திருச்செந்தூர்-பாலக்காடு ரெயில் மற்றும் கோவை-நாகர்கோவில் ரெயிலும் கோவில்பட்டி-திண்டுக்கலுக்கு இடையே ரத்து செய்யப்படுகிறது.
மதுரை-செங்கோட்டை மார்க்கத்தில் இயக்கப்படும் பயணிகள் ரெயிலை கூடுதலாக இயக்கவேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வரும் நிலையில் கோட்ட ரெயில்வே நிர்வாகம் மதுரை-செங்கோட்டை இடையேயான பயணிகள் ரெயிலை அடிக்கடி மாற்றம் செய்து ரத்து செய்வதால் பயணிகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. இதே போன்று திருச்செந்தூர்-பாலக்காடு ரெயிலையும் கோவை-நாகர்கோவில் ரெயிலையும் அடிக்கடி மாற்றம் செய்வதால் தென் மாவட்ட மக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது. இந்த மாற்றத்தை பற்றி முறையாக அறிவிப்பு வெளியிட்டாலும் கிராமப்புற மக்களுக்கு இந்த அறிவிப்பு எட்டாத நிலையில் அவர்கள் வழக்கம் போல இந்த ரெயில்களில் செல்வதற்கு ரெயில் நிலையத்திற்கு வந்து விடுகின்றனர்.
ரெயில் நிலையத்திற்கு வந்த பின்னரே அவர்களுக்கு இந்த ரெயில்கள் ரத்து செய்யப்பட்டு இருப்பது தெரிய வருகிறது. சில சந்தர்ப்பங்களில் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டு இருப்பது தெரியாமலே கவுண்ட்டர்களில் ரெயில்வே ஊழியர்கள் இதற்கான பயண சீட்டையும் வழங்கிவிடுகின்றனர். அதன் பின்னரே பயணிகளுக்கு ரெயில்கள் ரத்து செய்யப்பட்டு இருப்பது தெரிய வருவதால் அவர்களுக்கு பெரும் ஏமாற்றமும் பதற்றமும் ஏற்படுகிறது.
ரெயில்வே துறையின் அடிப்படை நோக்கமே பொது மக்களுக்கு போக்குவரத்து வசதி செய்துதர வேண்டும் என்பதுதான். ரெயில்வே துறைக்கு ரெயில்களை இயக்குவதால் வருமானம் ஒருபுறம் வந்தாலும் மக்களுக்கு ரெயில்கள் மூலம் போக்குவரத்து வசதி செய்துதர வேண்டும் என்பதுதான் அடிப்படை நோக்கமாக கருதப்படுகிறது. ஆனால் சமீபகாலமாக ரெயில்வே நிர்வாகம் மக்களின் வசதியை விட ரெயில்வே துறைக்கு கிடைக்கும் வருமானத்தையே கருத்தில் கொண்டு செயல்பட்டு வருகிறது.
இதனால் தான் தட்கல், பிரீமியம் தட்கல் சிறப்பு ரெயில்கள் என கூறி பலமடங்கு ரெயில் கட்டணத்தை உயர்த்தி உள்ளது. இந்நிலையில் ஏழை-எளிய மக்கள் நடுத்தர மக்கள் பயன்படுத்தி வரும் பயணிகள் ரெயிலில் போக்குவரத்தில் அடிக்கடி மாற்றம் செய்வதால் ரெயில்வே நிர்வாகத்தின் அடிப்படை நோக்கமே சிதறி விடுகிறது. கடந்த காலங்களில் ஒரு வருடத்தில் 2 அல்லது 3 முறை மட்டுமே ரெயில் பாதை பராமரிப்பு காரணமாக ரெயில் போக்குவரத்தில் தவிர்க்க முடியாத நிலையில் மாற்றங்கள் செய்யப்படும். பெரும்பாலும் பராமரிப்பு பணி நடைபெறும் இடங்களில் ரெயில்கள் மெதுவாக இயக்கப்பட்டு ரெயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுவதில்லை. ஆனால் சமீபகாலமாக மதுரை கோட்ட ரெயில்வே நிர்வாகம் ஒரு மாதத்தில் 2 முறை அல்லது 3 முறை முக்கிய பயணிகள் ரெயிலில் மாற்றம் செய்து பயணிகளுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது. இதற்கு காரணம் ரெயில்வே நிர்வாகம் முறையாக திட்டமிடல் இல்லாததே எனக்கூறப்படுகிறது.
எனவே மதுரை கோட்ட ரெயில்வே நிர்வாகம் பயணிகள் நலன் கருதி பயணிகள் ரெயில் போக்குவரத்தில் அடிக்கடி மாற்றம் செய்வதை தவிர்க்க வேண்டும். பராமரிப்பு பணி செய்வது அத்தியாவசியம் என்றாலும் அதை குறித்த கால அவகாசத்தில் முடித்து அடிக்கடி ரெயில் போக்குவரத்தில் மாற்றம் செய்வதையும் ரத்து செய்வதையும் தவிர்க்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது. தென் மாவட்ட மக்கள் பிரதிநிதிகளும் இப்பிரச்சினை குறித்து ரெயில்வே நிர்வாகத்திடம் பேசி இம்மாதிரியான அசவுகரியங்கள் மக்களுக்கு ஏற்படுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story