சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு அரசு மானியத்துடன் உலக தரச்சான்று - கலெக்டர் தகவல்


சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு அரசு மானியத்துடன் உலக தரச்சான்று - கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 15 Oct 2019 3:15 AM IST (Updated: 14 Oct 2019 8:31 PM IST)
t-max-icont-min-icon

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அரசு மானியத்துடன் உலக தரச்சான்று பெறலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:–

தேனி,

தேனி மாவட்ட தொழில் மையத்தின் மூலம் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ஏராளமான மானியங்கள், ஒற்றை சாளர முறையில் தடை இல்லா சான்று, இளைஞர்களுக்கு பல்வேறு திட்டங்களின் கீழ் தொழில் தொடங்கிட கடனுதவி, மானியம் வழங்குதல், சிறந்த தொழில் நிறுவனங்களுக்கு விருதுகள் வழங்குதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் சர்வதேச போட்டித்தன்மையினை மேம்படுத்தவும், உலகளாவிய சந்தையுடன் ஒருங்கிணைந்து செயல்படுத்துவதற்கும் வசதிகள் செய்து கொடுக்கப்பட உள்ளன. அதன்படி, சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தங்களின் உற்பத்தி தொழிலுக்கு ஐ.எஸ்.ஓ., எச்.ஏ.சி.சி.பி., ஜி.எச்.பி. போன்ற தரச்சான்றுகள் பெற்று பயன்பெற இயலும். நிறுவனங்கள் அச்சான்றிதழ்கள் பெற செலுத்தும் கட்டணத்தில் 50 சதவீதம் மானியமாக மாவட்ட தொழில் மையம் மூலம் திரும்பப் பெறுவதற்கும் அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.

இந்த சான்றிதழ் பெறுவதன் மூலம் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கிடையே தரமான பொருட்களை உற்பத்தி செய்வதற்கு ஏற்ற சூழ்நிலையை உருவாக்குதல், தரமான எந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் பயன்படுத்துதல், திறமையான ஆற்றலை பயன்படுத்தி உற்பத்தி மேற்கொள்வது, தயாரிப்பு மற்றும் செயல்முறைகளில் தரமான தரநிலைகளை தொடந்து உயர்த்துதல், உற்பத்தி தொழிற்சாலைகளில் பூஜ்ய குறைபாடு உற்பத்தியை கொண்டு வருவதல் போன்ற சூழ்நிலையை உருவாக்க முடியும்.

எனவே விருப்பமுள்ள நிறுவனங்கள் தரச்சான்று பெற்று மானியம் பெற விரும்பினாலோ அல்லது ஏற்கனவே நடப்பு ஆண்டில் தரச்சான்றிதழ் பெற்று உற்பத்தி தொழில் ஈடுபட்டு மானியம் பெற விரும்பினாலோ மாவட்ட தொழில் மைய அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story