தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு இந்து எழுச்சி முன்னணியினர் மாட்டு வண்டியுடன் ஆர்ப்பாட்டம்
தேனி-பெரியகுளம் சாலையில் தேவைக்கு அதிகமாக போடப்பட்ட வேகத்தடைகளை அகற்ற வலியுறுத்தி, இந்து எழுச்சி முன்னணியினர் கலெக்டர் அலுவலகம் முன்பு மாட்டு வண்டியுடன் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தேனி,
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலர் கந்தசாமி தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள், பல்வேறு அமைப்பினர் மனுக்கள் அளித்தனர்.
கூட்டத்தில் மனு அளிக்க இந்து எழுச்சி முன்னணி அமைப்பை சேர்ந்தவர்கள் ஒரு மாட்டு வண்டியுடன் வந்தனர். கலெக்டர் அலுவலகம் முன்பு மாட்டு வண்டியை நிறுத்தி திடீர் ஆர்ப்பாட்டத்தில் அவர்கள் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் ராமராஜ் தலைமை தாங்கினார்.
தேனியில் இருந்து பெரியகுளம் வரை சாலையில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் வேகத்தடைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த வேகத்தடையால் வாகன ஓட்டிகள் பரிதவிக்கின்றனர். பயண நேரம் அதிகரிக்கிறது. எனவே, தேவைக்கு அதிகமான இடங்களில் போடப்பட்ட வேகத்தடைகளை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கோரிக்கையை வலியுறுத்தி மாவட்ட வருவாய் அலுவலரிடம் அவர்கள் மனு அளித்தனர்.
இதேபோல் கலெக்டர் அலுவலகம் முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட தலைவர் நாகரத்தினம் தலைமையில், தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, நாம் தமிழர் கட்சி, தமிழ்ப்புலிகள் கட்சி, ஆதித்தமிழர் பேரவை, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, செங்கதிர் இயக்கம் ஆகியவற்றை சேர்ந்த நிர்வாகிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
கோடாங்கிபட்டி திருச்செந்தூர் காலனியில் சுந்தர் என்ற வாலிபர் தனது வீட்டின் முன்பு கால்மேல், கால்போட்டு அமர்ந்து இருந்ததால் அவரை அரிவாளால் வெட்டிய அதே பகுதியை சேர்ந்த கண்ணன், அவருடைய மகன் மனோஜ் இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து நிர்வாகிகள் அனைவரும் கோரிக்கையை வலியுறுத்தி குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு அளித்தனர்.
செங்கதிர் இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் அருந்தமிழரசு தலைமையில் நிர்வாகிகள் அளித்த மனுவில், ‘தேனி அல்லிநகரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்கள் மத்தியில் சாதி பாகுபாடு, மோதல் அடிக்கடி நடக்கிறது. எனவே இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறப்பட்டு இருந்தது.
இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் நாகராஜ் தலைமையில் அல்லிநகரம் காந்திநகர் பொதுமக்கள், குறைதீர்க்கும் கூட்டத்தில் அளித்த மனுவில், ‘பெரியகுளம் சாலையில் இருந்து காந்திநகருக்கு 500 மீட்டர் நடந்து செல்ல வேண்டும். இந்த பாதையில் தெருவிளக்குகள் இல்லை. இங்குள்ள பொது கழிப்பிடத்தில் அனுமதியின்றி மதுவிற்பனை செய்யப்படுகிறது. இதனால், இரவிலும், பகலிலும் இந்த வழியாக பெண்கள், மாணவ, மாணவிகள் செல்வதற்கு அச்சப்படுகின்றனர். எனவே, தெரு விளக்குகள் அமைத்து கொடுக்கவும், மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறப்பட்டு இருந்தது.
ஆண்டிப்பட்டி தாலுகா தங்கம்மாள்புரத்தை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், ‘தங்கம்மாள்புரத்தில் 60 குடும்பத்தினர் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருந்து வருகிறோம். நாங்கள் குடிநீர் வரி, வீட்டுவரி செலுத்தி வருகிறோம். தற்போது நாங்கள் குடியிருக்கும் வீடு வனத்துறைக்கு சொந்தமானது என்றும், எங்களை காலி செய்யுமாறும் வனத்துறையினர் நோட்டீஸ் கொடுத்துள்ளனர். எங்களுக்கு வேறு இட வசதி கிடையாது. எனவே, நாங்கள் குடியிருக்கும் வீட்டுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியிருந்தனர்.
Related Tags :
Next Story