3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான, குறிஞ்சி நில நாகரிகத்தை அறிய கொடைக்கானலில் அகழாய்வு


3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான, குறிஞ்சி நில நாகரிகத்தை அறிய கொடைக்கானலில் அகழாய்வு
x
தினத்தந்தி 14 Oct 2019 10:00 PM GMT (Updated: 14 Oct 2019 4:47 PM GMT)

தமிழரின் குறிஞ்சி நில நாகரிகத்தை அறிவதற்கு கொடைக்கானல் மலைப்பகுதியில் அகழாய்வு நடத்த வேண்டும் என்று திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் மண் பானைகளுடன் வந்து மனு கொடுக்கப்பட்டது.

திண்டுக்கல்,

வனவேங்கைகள் கட்சியின் தலைவர் இரணியன் தலைமையிலான சிலர் மண் பானைகள், கற்களுடன் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று வந்தனர். பின்னர் தமிழரின் குறிஞ்சி நில நாகரிகத்தை அறியும் வகையில் கொடைக்கானலில் அகழாய்வு நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

கொடைக்கானல் தாலுகா அடுக்கம் மற்றும் தாண்டிக்குடியில் எதிரொலிப்பாறை வனப்பகுதியில் சுமார் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த வரலாற்று சின்னங்கள் உள்ளன. அதில் பாண்டிய மன்னர்கள் காலத்தின் வணிகப்பாறை தலைவாசல்கள், கோட்டோவியங்கள், திசைகாட்டும் கட்டிடங்கள் மற்றும் கற்கால நாகரிகத்தின் எச்சங்கள் நிறைய உள்ளன.

மேலும் பண்டைய கால கல்திட்டைகளும் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கின்றன. கீழடி அகழாய்வில் 2 ஆயிரத்து 600 ஆண்டுகள் பழமையான பொருட்கள் கிடைத்துள்ளன. ஆனால், அதற்கு 400 ஆண்டுகளுக்கு முந்தைய குறிஞ்சி நில நாகரிகத்தின் எச்சங்கள், கொடைக்கானல் மலைப்பகுதியில் காணப்படுவதாக ஆதாரங்களுடன் வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

எனவே, தமிழர்களின் பண்டைய நாகரிகத்தை அறிய கீழடியில் அகழாய்வு செய்ததை போன்று, குறிஞ்சி நில நாகரிகத்தை மக்கள் அறியும் வகையில் கொடைக்கானல் மலைப்பகுதியில் அகழாய்வு நடத்த வேண்டும். அதில் கிடைக்கும் வரலாற்று சுவடுகள், சின்னங்கள் சேதம் அடையாமல் பாதுகாக்க ஆய்வகம் அமைக்க வேண்டும். இது தொடர்பாக மத்திய, மாநில அரசுகளுக்கு மாவட்ட நிர்வாகம் பரிந்துரை செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story