திருமூர்த்தி அணையில் இருந்து செங்குளத்திற்கு தண்ணீர் திறப்பு


திருமூர்த்தி அணையில் இருந்து செங்குளத்திற்கு தண்ணீர் திறப்பு
x
தினத்தந்தி 15 Oct 2019 4:00 AM IST (Updated: 15 Oct 2019 12:25 AM IST)
t-max-icont-min-icon

உடுமலையை அடுத்துள்ள திருமூர்த்தி அணையில் இருந்து செங்குளத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

உடுமலை,

பரம்பிக்குளம்-ஆழியாறு பாசனத்திட்டத்தில் (பி.ஏ.பி), பரம்பிக்குளம்-ஆழியாறு தொகுப்பு அணைகளில் இருந்து தண்ணீர் காண்டூர் கால்வாய் மூலம் உடுமலையை அடுத்துள்ள திருமூர்த்தி அணைக்கு கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து பாசனப்பகுதிகளுக்கு கால்வாய்கள் மூலம் விடப்படுகிறது.

இந்த பாசனத்திட்டத்தில் திருப்பூர்,கோவை மாவட்டங்களில். 3 லட்சத்து 77 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இந்த பாசன பகுதிகள் 4 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 6 மாதங்களுக்கு ஒரு மண்டலம் வீதம் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

இந்த திட்டத்தில் 4-ம் மண்டல பாசனத்திற்கான முதல் சுற்று தண்ணீர் கடந்த மாதம் (செப்டம்பர்) 25-ந்தேதி திறக்கப்பட்டது. இந்த பி.ஏ.பி.பாசனத்திட்டத்தில் உடுமலையில் இருந்து திருமூர்த்தி அணை வரை உள்ள பகுதிகளில் அடுத்தடுத்துள்ள வளையபாளையம் குளம், அம்மாபட்டி குளம், கரிசல் குளம், தினைக்குளம், செட்டிகுளம், செங்குளம், பெரியகுளம், ஒட்டுக்குளம் ஆகிய குளங்கள் மூலம் 2 ஆயிரத்து 786 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.

திருமூர்த்தி அணையில் இருந்து, பாலாறு பழைய ஆயக்கட்டு பாசனமாக தளி வாய்க்கால் மூலம் இந்த குளங்களுக்கு தண்ணீர் விடப்படும். இந்த குளங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் தண்ணீர் விடப்படும் காலம் ஆகஸ்டு முதல் மே மாதம் வரையிலான 10 மாதங்கள் ஆகும்.

ஒவ்வொரு ஆண்டும் அரசாணை பெறப்பட்டு, அரசாணையில் குறிப்பிடப்படும் அளவு தண்ணீர் இந்த 10 மாதகாலத்தில் அணையில் தண்ணீர் இருப்பு மற்றும் தண்ணீர் வரத்தைப்பொறுத்து இந்த குளங்களுக்கு, விவசாயிகளின் தேவையைப்பொறுத்து திறந்து விடப்படும்.

அதன்படி இந்த ஆண்டு 25.9.2019 முதல் அடுத்த ஆண்டு மே மாதம் 31-ந்தேதி வரையிலான காலத்திற்குள் தேவைக்கேற்ப தண்ணீர் திறந்துவிடும்படி அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த குளங்கள் பகுதியில் குடிமராமத்துப்பணிகள் காரணமாக தண்ணீர் திறந்து விடுவது தாமதமானது.

தற்போது முதலாவதாக செங்குளம் மற்றும் வளையபாளையம் குளம் ஆகிய குளங்களுக்கு திருமூர்த்தி அணையில் இருந்து தளி வாய்க்கால் மூலம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. கடந்த 3 நாட்களாக செங்குளத்திற்கு வினாடிக்கு 40 கன அடி வீதமும், வளையபாளையம் குளத்திற்கு வினாடிக்கு 10 கன அடி வீதமும் தண்ணீர் வந்து கொண்டுள்ளது.

உடுமலை தளி சாலையில் பள்ளபாளையம் பகுதியில் உள்ள செங்குளத்தின் மொத்த உயரம் 10 அடி. செங்குளத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் இந்த குளத்தின் நீர்மட்டம் மளமளவென்று உயர்ந்து வருகிறது. நேற்று இந்த குளத்தின் தண்ணீர் மட்ட உயரம் 6 அடியாக இருந்தது. செங்குளத்திற்கு தண்ணீர் வந்து சேர்ந்த நிலையில் குளம் ரம்மியமாக காட்சியளிக்கிறது. குளத்திற்கு அழகிய பறவைகள் அதிகமாக வருகின்றன. இனி இந்த பாசன திட்டத்தில் மற்ற குளங்களுக்கும் தண்ணீர் திறந்துவிடப்பட உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story