படியில் நின்று செல்போன் பேசியதை கண்டித்த அரசு பஸ் கண்டக்டரை கல்லால் தாக்கிய தந்தை- மகன் கைது


படியில் நின்று செல்போன் பேசியதை கண்டித்த அரசு பஸ் கண்டக்டரை கல்லால் தாக்கிய தந்தை- மகன் கைது
x
தினத்தந்தி 15 Oct 2019 3:45 AM IST (Updated: 15 Oct 2019 2:00 AM IST)
t-max-icont-min-icon

படியில் நின்று செல்போன் பேசியதை கண்டித்த அரசு பஸ் கண்டக்டரை கல்லால் தாக்கிய தந்தை மற்றும் அவரது மகனை போலீசார் கைது செய்தனர்.

லாலாபேட்டை,

மன்னார்குடியில் இருந்து திருப்பூர் நோக்கி அரசு பஸ் ஒன்று நேற்று முன்தினம் வந்து கொண்டிருந்தது. அந்த பஸ்சை திருவாரூரை சேர்ந்த ராம்ராஜ் என்பவர் ஓட்டினார். தஞ்சாவூரை சேர்ந்த பிரகா‌‌ஷ் (வயது 29) என்பவர் கண்டக்டராக இருந்தார். இந்தநிலையில் அந்த பஸ் கரூர் மாவட்டம், குளித்தலை பஸ் நிலையத்தில் வந்து நின்றது. இதில் கீழசிந்தலவாடியை சேர்ந்த ஆனந்தகுமார் (47) ஏறினார்.

அப்போது பஸ் புறப்பட்ட சிறிது நேரத்தில் பஸ்சின் படிக்கட்டில் நின்று கொண்டு ஆனந்தகுமார் தனது செல்போனில் பேசி கொண்டு வந்தார். அப்போது பஸ் கண்டக்டர் பிரகா‌‌ஷ், படியில் நின்று செல்போனில் பேசிக்கொண்டு வந்த ஆனந்தகுமாரை கண்டித்து மேலே ஏறும்படி கூறினார். இதனால் 2 பேருக்கும் இடையே ஓடும் பஸ்சில் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து ஆனந்தகுமார் இந்த தகராறு குறித்து தனது மகன் தினேசுக்கு போன் மூலம் தகவல் கொடுத்துள்ளார்.

தந்தை-மகன் கைது

இதற்கிடையே அந்த பஸ் லாலாபேட்டை பஸ் நிலையம் வந்தடைந்தது. இதையடுத்து பஸ்சில் இருந்து கீழே இறங்கி வந்த, ஆனந்தகுமார் மற்றும் அங்கு நின்று கொண்டிருந்த அவரது மகன் தினே‌‌ஷ் ஆகியோர் சேர்ந்து அங்கு கிடந்த கல்லை எடுத்து கண்டக்டரை தாக்கினர். இதில் அவர் படுகாயமடைந்தார்.

இதைக்கண்ட அங்கிருந்தவர்கள் படுகாயமடைந்த கண்டக்டர் பிரகாசை மீட்டு சிகிச்சைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில் லாலாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து அரசு பஸ் கண்டக்டரை தாக்கிய தந்தை, மகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story