கோவை நேருநகர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் - கலெக்டரிடம் பெண்கள் மனு


கோவை நேருநகர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் - கலெக்டரிடம் பெண்கள் மனு
x
தினத்தந்தி 14 Oct 2019 10:45 PM GMT (Updated: 14 Oct 2019 8:40 PM GMT)

கோவை நேருநகர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என்று அந்த பகுதியை சேர்ந்த பெண்கள், கலெக்டரிடம் மனு அளித்தனர்.

கோவை,

கோவை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் ராஜாமணி தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார். இதில் முதியோர் உதவித்தொகை, வீட்டுமனைப்பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மனு அளித்தனர். இந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

இந்த கூட்டத்தில் தமிழக விவசாயிகள் சங்க மாநில செயலாளர் வேலு நாயக்கர் மற்றும் விவசாயிகள் கொடுத்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:-

கோவை தடாகம், நஞ்சுண்டாபுரம் உள்ளிட்ட 9 இடங்களில் காற்று மாசு குறித்து அறிந்து கொள்வதற்காக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகள் நவீன கருவிகளை தற்காலிகமாக பொருத்தி உள்ளனர்.

தற்போது பெரும்பாலான செங்கல் சூளைகள் இயங்கவில்லை. இதனால் அந்த பகுதியில் லாரிகள் உள்ளிட்ட கனரக வாகனங்களின் இயக்கமும் நிறுத்தப்பட்டு உள்ளது. இதுதவிர தற்போது மழை பெய்து வருவதால் இயற்கையாகவே காற்றில் மாசு குறைந்தே காணப்படும். இந்த நேரத்தில் காற்று மாசு குறித்து அளவீடு செய்தால் அது தவறான முடிவை காட்டலாம்.

எனவே கோவையில் செங்கல் சூளைகள் அமைந்துள்ள பகுதியில் இந்த காற்று மாசு அளவீடு பணியினை 6 மாதத்திற்கு நீட்டிப்பு செய்வதுடன், அனைத்து காலநிலைகளையும் காற்று மாசு குறித்து அளவீடு செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

கோவை குருடம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட நேருநகர் பகுதியை சேர்ந்த பெண்கள் அளித்த மனுவில், கோவை-மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் இருந்து மத்திய ஆயுதப்படை போலீஸ் பயிற்சி முகாமிற்கு செல்லும் வழியில் ஏராளமான சிறு கிராமங்கள் உள்ளன.

தற்போது இந்த பகுதியில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த பகுதியில் உள்ள சிறு, குறு நிறுவனங்களில் ஏராளமான பெண்கள் பணி புரிந்து வருகின்றனர். இந்த டாஸ்மாக் கடையில் மது குடிக்கும் நபர்கள் அந்த வழியாக செல்லும் பெண்களை கேலி செய்கின்றனர். மாணவிகளுக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. எனவே இந்த டாஸ்மாக் கடையை இங்கிருந்து அகற்ற வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.

செட்டிப்பாளையம் கலைஞர் நகரை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், எங்கள் பகுதிக்கு செல்லும் சாலை குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனை உடனடியாக சீரமைக்க வேண்டும். மேலும் குடிநீர், தெருவிளக்குள் உள்ளிட்ட எவ்வித அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை. எனவே அடிப்படை வசதிகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

நாம் தமிழர் கட்சியின் கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை நிர்வாகிகள் அளித்த மனுவில், தமிழக அரசு அனைத்து வணிக நிறுவனங்கள், தனியார் அலுவலகங்களில் தமிழில் பெயர்ப்பலகை வைக்க வேண்டும் என்ற அரசாணை பிறப்பித்து உள்ளது. ஆனால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு 20 ஆண்டுகளை கடந்த பின்னரும் கோவை மாவட்டத்தில் பெரும்பாலான வர்த்தக நிறுவனங்களில் தமிழில் பெயர் பலகைகள் வைக்கப்படாமல் உள்ளது. எனவே உரிய நடவடிக்கை எடுத்து பெயர்ப்பலகைகளை தமிழில் மாற்றி வைக்க நடவடிக்கை எடு்க்க வேண்டும் என்று உள்ளது.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க கோவை மாவட்டக்குழு நிர்வாகிகள் கைகளில் மஞ்சள் செடிகளை பிடித்தப்படி அளித்த மனுவில், கோவை மாவட்டத்தில் மேட்டுப்பாளையம்,அன்னூர், தொண்டாமுத்துார், சிறுமுகை உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் மஞ்சள் சாகுபடி செய்யப்பட்டு வந்தது. தற்சமயம் மேற்படி மஞ்சள் சாகுபடி ஆள்பற்றாக்குறை உற்பத்தி செலவு, தட்பவெப்ப சூழ்நிலை உற்பத்தி மகசூல் பாதிப்பு மற்றும் விலைப் பற்றாக்குறை போன்ற காரணங்களால் நாளுக்குநாள் மஞ்சள் சாகுபடி பரப்பளவு குறைந்து வருகிறது.

கடந்த 10 ஆண்டுகளாக மஞ்சளின் விலை குவிண்டாலுக்கு (100 கிலோ ) ரூ. 5,500 முதல் ரூ.8,500 வரை விலை இருந்து வந்தது. தற்சமயம் விற்பனை விலை குறைந்து ரூ.6,500 வரை மட்டுமே இருந்து வருகிறது. இதனால் விவசாயிகள் முழுமையாக மஞ்சள் விவசாயத்தை கைவிடும் நிலை உள்ளது. விவசாயிகள் உற்பத்தி செய்த மஞ்சளை அந்தந்த கூட்டுறவு சங்கங்களிலும் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களிலும் இருப்பு வைத்து அதற்குரிய பொருளீட்டு கடன் பெற்றுக்கொள்ளலாம் என்ற விதி இருந்தும் அனைத்து விவசாயிகளும் பயன்பெற முடியவதில்லை. எனவே மஞ்சளுக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்திடவும், விவசாயிகளை ஊக்கப்படுத்தும் வகையில் தமிழக அரசு விதை மஞ்சள்களை 100 சதவீதம் மானிய விலையில் வழங்கிடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story