ஓவேலியில் இருந்து ஆரோட்டுபாறை வழியாக, எல்லமலைக்கு அரசு பஸ் இயக்க வேண்டும் - கலெக்டரிடம், மாணவர்கள் கோரிக்கை


ஓவேலியில் இருந்து ஆரோட்டுபாறை வழியாக, எல்லமலைக்கு அரசு பஸ் இயக்க வேண்டும் - கலெக்டரிடம், மாணவர்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 15 Oct 2019 3:00 AM IST (Updated: 15 Oct 2019 2:10 AM IST)
t-max-icont-min-icon

ஓவேலியில் இருந்து ஆரோட்டுபாறை வழியாக எல்லமலைக்கு அரசு பஸ் இயக்க வேண்டும் என்று கலெக்டரிடம் மாணவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

ஊட்டி,

ஊட்டியில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை தாங்கினார். இதில் நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக அளித்தனர். அதன்படி எல்லமலை, ஓவேலி பகுதி பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அளித்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:-

கடந்த ஆகஸ்டு மாதம் பெய்த கனமழையால் வெள்ளம் மற்றும் மண்சரிவால் ஓவேலி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகள் பாதிக்கப்பட்டன. சாலைகள், நடைபாதைகள் சேதம் அடைந்து உள்ளன. சேரன் நகர் பாலம் பழுதடைந்து உள்ளதால் சீபுரம், எல்லமலை, சுபா‌‌ஷ் நகர், இந்திரா நகர், பெரியசோலை, அம்பிளிமலை, சஞ்சய் நகர், பசுமை நகருக்கு வாகன போக்குவரத்து துண்டிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் பார்வுட் அரசு உயர்நிலைப்பள்ளி, ஓவேலி அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் குறித்த நேரத்துக்கு பள்ளிகளுக்கு செல்ல முடியவில்லை.

இதற்கிடையில் மேற்கண்ட பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். வாகன போக்குவரத்து துண்டிக்கப்பட்டு உள்ளதால் கர்ப்பிணிகள், நோயாளிகள் அவதி அடைகின்றனர். காட்டுயானைகள் நடமாட்டம் உள்ளதால் பள்ளிக்கு மாணவர்கள் சென்று வருவதில் அச்சம் உள்ளது. எனவே சேரன் நகர் பாலத்தை சீரமைக்கும் பணி முடியும் வரை தற்காலிகமாக போக்குவரத்துக்கு மாற்றுப்பாதை ஏற்படுத்த வேண்டும். குறிப்பாக ஓவேலியில் இருந்து ஆரோட்டுபாறை, சுபா‌‌ஷ் நகர் வழியாக எல்லமலைக்கு செல்லும் சாலையை சீரமைத்தால் துண்டிக்கப்பட்ட இடங்களுக்கு வாகனங்கள் செல்ல முடியும். மேலும் சீபுரம், பெரியசோலை பகுதிகளுக்கும் வாகனங்களை இயக்கலாம். எனவே அந்த சாலையை சீரமைப்பதோடு, ஆரோட்டுபாறை, சுபா‌‌ஷ் நகர் வழியாக அரசு பஸ்சை விரைவில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

ஊட்டி அருகே அன்பு அண்ணா காலனியை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், கனமழையின் போது அன்பு அண்ணா காலனியில் மிகவும் பாதிப்பு ஏற்பட்டது. நடைபாதை சேதம் அடைந்து உள்ளதால் பொதுமக்கள் தங்களது வீடுகளுக்கு நடந்து செல்ல இயலவில்லை. மேலும் நடைபாதையையொட்டி உள்ள தடுப்புச்சுவர் இடிந்து விழுந்து உள்ளதால் வீடுகள் அந்தரத்தில் தொங்குகின்றன.

இதனால் அச்சத்துடன் மக்கள் வசிக்க வேண்டிய நிலை உள்ளது. ஆகவே நடைபாதையை சீரமைத்து, தடுப்புச்சுவர் கட்டி தர வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

Next Story