விவசாய நிலங்களை சுற்றி மண் அள்ளுவதால் பாதிப்பு; நடவடிக்கை கோரி கலெக்டரிடம் மனு


விவசாய நிலங்களை சுற்றி மண் அள்ளுவதால் பாதிப்பு; நடவடிக்கை கோரி கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 15 Oct 2019 4:15 AM IST (Updated: 15 Oct 2019 4:00 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகர் அருகே விவசாய நிலங்களை சுற்றி பெரிய பள்ளம் தோண்டி மண் அள்ளுவதால் பெரும் பாதிப்பு ஏற்படுவதால் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க கோரி விவசாய சங்கத்தினர் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

விருதுநகர்,

விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் சிவஞானம் தலைமையில் நடந்தது. பாவாலி பஞ்சாயத்துக்கு உட்பட்ட எல்கைப்பட்டி, சீனியாபுரம்,சந்திரகிரிபுரம் மற்றும் பாவாலி கிராமங்களை சேர்ந்த விவசாய சங்கத்தினர் கலெக்டரிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

பாவாலி பஞ்சாயத்துக்கு உட்பட்ட எல்கைப்பட்டி, சீனியாபுரம்,சந்திரகிரிபுரம் மற்றும் பாவாலி கிராமங்களில் பல ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. இந்த விவசாய நிலங்களை நம்பித்தான் அப்பகுதி விவசாயிகள் வாழ்வாதாரம் பெற்றுள்ளனர். இந்நிலையில் சவடு மண் அள்ளுவதற்காக அந்த பகுதியில் விவசாய நிலங்களை சிலர் விலைக்கு வாங்கி உள்ளனர். விவசாய நிலங்களை சுற்றியும் அவர்கள் நிலங்களை வாங்கி சவடு மண் அள்ளி வருகின்றனர்.

இவ்வாறு அவர்கள் வாங்கியுள்ள நிலங்களில் பெரும் பள்ளங்களை தோண்டி மண் அள்ளுவதால் விவசாய நிலங்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் கிராமத்தின் அருகிலேயே எல்லை பகுதிகளில் ராட்சத எந்திரங்கள் மூலம் பெரிய பள்ளம் தோண்டுவதால் விவசாய நிலங்களுக்கு பாதிப்பு ஏற்படுவதுடன் கிராமத்திற்கான நிலத்தடி நீரும் பாதிக்கப்படுகிறது. இம்மாதிரியான நிகழ்வுகளால் கண்மாய்களுக்கு தண்ணீர் வருவதில்லை. இவர்கள் தோண்டிய பெரிய பள்ளங்களிலேயே தண்ணீர் தேங்கி விடுகிறது.

இது பற்றி பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே தங்களுக்கு வாழ்வாதாரமான விவசாய நிலங்களை பாதுகாக்க இது பற்றி விசாரணை செய்து பெரும் பள்ளம் தோண்டி மண் அள்ளுவதற்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

வத்திராயிருப்பு பகுதியை சேர்ந்த விழிப்புணர்வு சேவை மையத்தின் சார்பில் கலெக்டரிடம் கொடுத்துள்ள மனுவில் வத்திராயிருப்பு பேரூராட்சியில் 3 ஆண்டுகளுக்கு மேல் பல்வேறு அலுவலகத்தில் அதிகாரிகள் பணிபுரிந்து வரும் நிலையில் உள்ளாட்சி தேர்தல் வரஇருப்பதால் 3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்து வரும் ஊழியர்களை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும். பல மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் வருவதையொட்டி 3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்து வரும் ஊழியர்களை மாற்றியுள்ளனர். எனவே விருதுநகர் மாவட்டத்திலும் 3 ஆண்டுகளுக்கு மேல் உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரிந்து வரும் ஊழியர்களை உடனடியாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியுள்ளனர்.

மனிதநேய ஜனநாயக கட்சி சார்பாக மாவட்ட செயலாளர் மைதீன் அப்துல்காதர் கலெக்டரிடம் கொடுத்துள்ள மனுவில், மாவட்டம் முழுவதும் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் மது ஒழிப்பு பிரசாரத்தை மேற்கொண்டு வரும் நிலையில் வீரசோழன் பகுதியில் மக்கள் அதிகமாக வசிக்கக்கூடிய பகுதியில் மேல்நிலைப்பள்ளிக்கு மாணவ-மாணவிகள் செல்லும் வழியில் இடையூறு ஏற்படுத்தும் வகையில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரியுள்ளார்.

புதிரை வண்ணார் எழுச்சி பேரவை சார்பில் கலெக்டரிடம் கொடுத்துள்ள மனுவில் வெம்பக்கோட்டை தாலுகாவில் புதிரை வண்ணார் இனத்தை சேர்ந்த 20 குடும்பங்கள் வசித்து வருவதாகவும் எங்களுக்கு உடனடியாக சாதி சான்றிதழ் வழங்க உத்தரவிடக்கோரி மனு அளித்தனர். இதுகுறித்து வெம்பக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் உடனடியாக சாதி சான்றிதழ் கிடைக்க உத்தரவு பிறப்பிக்குமாறும் வலியுறுத்தினர்.

சேத்தூர் அருந்ததியினர் இனத்தை சேர்ந்த கிராம மக்கள் கலெக்டரிடம் கொடுத்துள்ள மனுவில் சேத்தூர் பகுதியில் 60 வீடுகளில் அருந்ததியினர் குடும்பங்கள் வசித்து வருவதாகவும் அனைவரும் வறுமைகோட்டுக்கு கீழ் வாழ்ந்து வருவதாகவும் கூலி வேலை செய்து பிழைத்து வரும் நிலையில் எங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என கோரியுள்ளனர். இதே போன்று ராஜபாளையம் பகுதியில் குடிசைமாற்று வாரியம் சார்பில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அதில் தங்களுக்கு வீடு வழங்க கோரி உள்ளனர்.

ஆவுடையாபுரம் தெற்கு தெருவில் வசிக்கும் அருந்ததியர் சமுதாய மக்கள் கலெக்டரிடம் கொடுத்துள்ள மனுவில், தங்கள் பகுதி வழியாக தனிநபர் ஒருவர் கனரக வாகனங்களை இயக்குவதால் தங்கள் வீடு மற்றும் கோவில்கள் சேதமடைவதாகவும் இதுபற்றி அவரிடம் கேட்டால் தங்களை மிரட்டுவதாகவும் எனவே தங்கள் பகுதியில் கனரக வாகனங்கள் செல்வதற்கு தடை விதிக்க கோரியுள்ளனர்.

Next Story