மயிலாடுதுறையில் பாதாள சாக்கடை பள்ளத்தில் லாரி சிக்கியது


மயிலாடுதுறையில் பாதாள சாக்கடை பள்ளத்தில் லாரி சிக்கியது
x
தினத்தந்தி 16 Oct 2019 4:15 AM IST (Updated: 15 Oct 2019 9:59 PM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறையில் பாதாள சாக்கடை பள்ளத்தில் லாரி சிக்கியது.

மயிலாடுதுறை,

மயிலாடுதுறையில், கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு மத்திய- மாநில அரசுகள், பொதுமக்கள் பங்களிப்புடன் ரூ.42 கோடியில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டது. கடந்த 1½ ஆண்டுகளாக நகரில் போக்குவரத்து அதிகம் உள்ள முக்கிய சாலைகளான காந்திஜி சாலை, கச்சேரி சாலை, தரங்கம்பாடி சாலை, திருவாரூர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் அடிக்கடி பாதாள சாக்கடை குழாய் உடைந்து, சாலை சேதமடைந்து உள்வாங்குகிறது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்படுவதுடன், பாதாள சாக்கடை கழிவுநீர் வெளியேறி சுகாதார சீர்க்கேடும் ஏற்படுகிறது. மேலும், மயிலாடுதுறையில் உள்ள தெருக்கள், முக்கிய சாலைகள் ஆகிய இடங்களில் பாதாள சாக்கடைக்காக அமைக்கப்பட்டுள்ள ஆள்நுழைவு தொட்டியின் மூடி வழியாகவும் பாதாள சாக்கடை கழிவுநீர் வெளியேறி குட்டைபோல் தேங்கி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது.

பள்ளம்

இந்த நிலையில் மயிலாடுதுறை கன்னாரத்தெரு முக்கூட்டில் இருந்து திருவாரூர் செல்லும் சாலையில் கடந்த மாதம் பாதாள சாக்கடை குழாய் உடைந்ததால் 20 அடி ஆழத்திற்கு சாலை உள்வாங்கி பெரிய பள்ளம் ஏற்பட்டது. இதனால் திருவாரூர் சாலையில் முற்றிலுமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பாதாள சாக்கடை குழாய் உடைப்பு சரி செய்யப்பட்டது. சாலையில் ஏற்பட்ட பள்ளமும் மணலை கொண்டு தற்காலிகமாக மூடப்பட்டது.

அதன்பின்னர் திருவாரூர் சாலையில் வாகனங்கள் சென்று வந்தன. ஆனால், சரிவர மூடப்படாத அந்த பள்ளம் இருப்பதை எச்சரிக்கை செய்யும் வகையில் எச்சரிக்கை பலகை வைக்கப்படவில்லை. பெயரளவுக்கு இரும்பு தடுப்பு மட்டும் இருந்தது. இதனால் வெளியூரில் இருந்து வரும் வாகனங்கள் பள்ளம் இருப்பது தெரியாமல் சிக்கி கொள்ளும் அபாயம் இருந்து வந்தது.

லாரி சிக்கியது

நேற்று இந்த வழியாக திருவாரூருக்கு லோடு ஏற்றி சென்ற ஒரு லாரி பாதாள சாக்கடை பள்ளத்தில் சிக்கியது. அப்போது மழை பெய்து கொண்டே இருந்ததால் லாரியை மீட்கும் பணியில் சிரமம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து நகராட்சி ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு வந்து கிரேன் மூலம் லாரியை மீட்டனர். தற்போது மழை பெய்து அந்த பகுதி முழுவதும் சேறும்-சகதியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்க முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே பள்ளத்தில் வாகனங்கள் சிக்கி கொள்ளாத வகையில், பள்ளத்தை மூட வேண்டும் என்றும், அதுவரை கனரக வாகனங்கள் மேற்கண்ட சாலையின் வழியாக செல்ல அனுமதிக்கக்கூடாது என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story