‘மக்களை பற்றி கவலைப்படாத அ.தி.மு.க.வுக்கு பாடம் புகட்டுங்கள்’ - உதயநிதி ஸ்டாலின் பேச்சு


‘மக்களை பற்றி கவலைப்படாத அ.தி.மு.க.வுக்கு பாடம் புகட்டுங்கள்’ - உதயநிதி ஸ்டாலின் பேச்சு
x
தினத்தந்தி 16 Oct 2019 4:45 AM IST (Updated: 15 Oct 2019 11:20 PM IST)
t-max-icont-min-icon

மக்களை பற்றி கவலைப்படாத அ.தி.மு.க.வுக்கு சரியான பாடம் புகட்டுங்கள் என்று விக்கிரவாண்டி தொகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

விழுப்புரம்,

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் புகழேந்தியை ஆதரித்து கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நேற்று காலை மாம்பழப்பட்டு, கக்கனூர், வீராமூர், அதனூர், தென்னமாதேவி ஆகிய இடங்களிலும், மாலையில் உடையாநத்தம், பழையகருவாட்சி, வெள்ளையாம்பட்டு, பெருங்கலாம்பூண்டி, நங்காத்தூர் ஆகிய இடங்களிலும் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு பொதுமக்களிடம் உதயசூரியன் சின்னத்தில் வாக்குகள் சேகரித்தார்.

அப்போது அவர் பேசியதாவது:-

நாங்கள் செல்லும் இடமெல்லாம் மக்களிடம் மிகப்பெரிய எழுச்சி உள்ளது. ‘வெற்றி நமதே’ என்று ஆதரவை தருகின்றனர். இன்னும் பெருமையோடு சொல்லப்போனால் அ.தி.மு.க.வை சேர்ந்த தோழர்களும் எங்கள் வாகனங்களை மறித்து நீங்கள்தான் வெற்றி பெறுவீர்கள் என்று சொல்கிறார்கள்.

இந்த இடைத்தேர்தலில் உதயசூரியன் உதிக்கப்போவது உறுதி. இது நிச்சயிக்கப்பட்ட ஒன்று. முதல்-அமைச்சரின் பெயர்கூட பொதுமக்களுக்கு தெரியவில்லை. அப்படிப்பட்டவர்தான் ஆட்சி பொறுப்பில் உள்ளார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்று அவரே சொல்லிக்கொள்கிறார். அவர் மோடியின் எடுபிடியாக இருக்கிறார். தமிழ்நாட்டிற்கு வருவதற்கு மோடிக்கு பயம். அதனால்தான் யாரும் கண்டுபிடிக்க முடியாது என்பதற்காக வேட்டி கட்டி வருகிறார். அவர்களின் கூட்டணிக்கு கடந்த நாடாளுமன்ற தேர்தலில் சரியான சவுக்கடி கொடுத்தீர்கள். அதேபோன்று இந்த தேர்தலிலும் அவர்கள் கூட்டணிக்கு சரியான சவுக்கடி கொடுக்க வேண்டும்.

ஒரு முதல்-அமைச்சர் எப்படி இறந்தார்? என்பதை தெரிவிக்க வேண்டிய பொறுப்பு ஆளும் ஆட்சிக்கு இருக்கிறது. ஆனால் ஜெயலலிதா எப்படி இறந்தார்? என்பதை இதுவரை அவர்கள் தெரிவிக்கவில்லை. மர்மமாகவே இருக்கிறது. தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் முதல்வேலை, ஜெயலலிதா மரணத்தில் இருக்கும் மர்மம் வெளிக்கொண்டு வரப்படும். அ.தி.மு.க.வினருக்கும் சேர்த்து நாம் வேலை செய்ய வேண்டியுள்ளது.

மக்களை பற்றி கவலைப்படாத அ.தி.மு.க. ஆட்சிக்கு இந்த இடைத்தேர்தலில் சரியான பாடம் புகட்ட வேண்டும். சிறந்த வேட்பாளரான புகழேந்தியை நீங்கள் தேர்ந்தெடுத்து சட்டமன்றத்திற்கு அனுப்பி வைத்தால் இந்த தொகுதியில் உள்ள பிரச்சினைகளை உங்கள் குரலாக சட்டசபையில் பேசி அனைத்து பிரச்சினைகளையும் தீர்த்து வைப்பார். இன்னும் 5 நாட்கள்தான் இருக்கிறது. நமது கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள வேண்டும். தேர்தலுக்கு தேர்தல் வருபவர்கள் நாங்கள் கிடையாது. எப்போதும் மக்களோடு பணியாற்றுகிற கட்சி தி.மு.க., இந்த ஆட்சி மீதுள்ள அதிருப்தியை மக்கள் பதிவு செய்யும் வகையில் விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க.வை வெற்றி பெற வைக்க வேண்டும். தி.மு.க. ஆட்சிக்கு வந்து முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதும் மக்களுக்கு தேவையான அனைத்து திட்டங்களும் படிப்படியாக நிறைவேற்றி தரப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதில் எம்.எல்.ஏ.க்கள் பொன்முடி, தா.மோ.அன்பரசன், பொன்.கவுதமசிகாமணி எம்.பி., ஒன்றிய செயலாளர்கள் கல்பட்டு ராஜா, முருகன், மாவட்ட வக்கீல் அணி துணை அமைப்பாளர் காடுவெட்டி ஏழுமலை உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story