இன்றும், நாளையும் மஞ்சள் ‘அலர்ட்’ ; கர்நாடக கடலோர மாவட்டங்களில் மீண்டும் கனமழை
கர்நாடக கடலோர மாவட்டங்களில் மீண்டும் கனமழை பெய்து வருகிறது. இதனால் இன்றும் (புதன்கிழமை), நாளையும் (வியாழக்கிழமை) ஆகிய 2 நாட்கள் மஞ்சள் ‘அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
மங்களூரு,
கர்நாடகத்தில் கடந்த ஆகஸ்டு மாத தொடக்கத்தில் தென்மேற்கு பருவமழை இடைவிடாது கொட்டி தீர்த்தது. இந்த கனமழையால் மாநிலத்தில் தட்சிண கன்னடா, உடுப்பி, உத்தரகன்னடா, விஜயாப்புரா, கலபுரகி, பெலகாவி, குடகு, சிக்கமகளூரு, சிவமொக்கா ஆகிய மாவட்டங்களில் வரலாறு காணாத சேதம் ஏற்பட்டது. ஏராளமான மக்கள் உறவுகளையும், உடைமைகளையும் இழந்து நிவாரண முகாம்களில் தஞ்சம் புகுந்தனர்.
இதனால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர். கடந்த சில மாதங்களாக மாநிலத்தில் மழை பெய்யாமல் இயல்பு நிலை திரும்பி வந்தது. இந்த நிலையில் தற்போது மாநிலத்தில் பெங்களூரு, தட்சிண கன்னடா, உடுப்பி, சிக்கமகளூரு உள்ளிட்ட பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்ய தொடங்கி உள்ளது.
குறிப்பாக கடலோர மாவட்டங்களான தட்சிண கன்னடா, உடுப்பி, உத்தரகன்னடா ஆகிய மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. கர்நாடக கடலோர மாவட்டங்களில் மீண்டும் கனமழை பெய்ய ெதாடங்கி உள்ளதால் மக்கள் கவலை அடைந்துள்ளனர். கடலோர மாவட்டங்களான தட்சிண கன்னடா, உடுப்பி, உத்தரகன்னடா ஆகிய மாவட்டங்களில் இன்றும் (புதன்கிழமை), நாளையும் (வியாழக்கிழமை) 2 நாட்கள் மஞ்சள் ‘அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனால் மீனவர்கள் இன்னும் 3 நாட்களுக்கு மீன்பிடிக்க கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அரபிக்கடலில் அலையின் சீற்றம் அதிகமாக இருக்கும் என்பதால், பொதுமக்கள் யாரும் கடலின் அருகே செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடலோர மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் மாநிலத்தில் உள்மாவட்டங்களில் இடி மற்றும் மின்னலுடன் லேசான மழை பெய்யவும் வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story