தஞ்சை மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் ரூ.1.90 கோடியில் அமைக்கப்பட்ட உயர்கோபுர மின்விளக்குகள்


தஞ்சை மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் ரூ.1.90 கோடியில் அமைக்கப்பட்ட உயர்கோபுர மின்விளக்குகள்
x
தினத்தந்தி 15 Oct 2019 11:00 PM GMT (Updated: 15 Oct 2019 6:58 PM GMT)

தஞ்சை மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் ரூ.1.90 கோடியில் அமைக்கப்பட்ட உயர்கோபுர மின் விளக்குகள் பணிகள் முடிவடைந்து சோதனையும் நிறைவடைந்து விட்டது.

தஞ்சாவூர்,

தஞ்சையில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கமான அன்னை சத்யா விளையாட்டு அரங்கம் மருத்துவக்கல்லூரி சாலையில் உள்ளது. இங்கு கால்பந்து மைதானம், ஹாக்கி மைதானம், கைப்பந்து மைதானம், தடகள போட்டிக்கான இடங்கள் தனித்தனியே உள்ளன. இது தவிர நவீன டென்னிஸ் ஆடுகளம், உள் விளையாட்டரங்கம், உடற்பயிற்சிக் கூடம் ஆகியவையும் உள்ளன.

மேலும் நீச்சல் குளமும் தனியே உள்ளது. இது தவிர நடைபயிற்சி செல்வோர்கள் சென்று வருவதற்காக மைதானத்தை சுற்றிலும் தார்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இவற்றை தொடர்ந்து உலகத் தரம் வாய்ந்த செயற்கை இழை தடகள ஓடுபாதையும் (சிந்தெடிக் ஓடுதளம்) அமைக்க கடந்த 2017-ம் ஆண்டு திட்டமிடப்பட்டது.

இதுதொடர்பாக இந்திய விளையாட்டு ஆணைய அலுவலர்கள் இந்த விளையாட்டரங்கத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது, ஏற்கெனவே உள்ள தடகள ஓடு பாதையை மின்னொளி வசதியுடன் கூடிய செயற்கை இழை தடகள ஓடு பாதையாக மாற்றுவது என முடிவு செய்யப்பட்டது.

இதன் முதல் கட்டமாக, தடகளப் பாதையில் 4 மூலைகளிலும் தலா ஒரு உயர் பன்முக விளக்கு ரூ.1 கோடியே 90 லட்சம் செலவில் அமைக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் கடந்த ஆண்டு தொடங்கியது. இதற்காக 4 மூலைகளிலும் தலா 28 மீட்டர் உயரத்தில் மின்விளக்கு அமைப்பதற்கான கம்பம் அமைக்கப்பட்டது.

இதில் ஒவ்வொரு மின்கம்பத்திலும் 28 நவீன விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு விளக்கும் தலா 2 ஆயிரம் வாட்ஸ் திறன் கொண்டது ஆகும். தற்போது இந்த விளக்குகள் பொருத்தப்பட்டு பணிகள் அனைத்தும் நிறைவடைந்து விட்டன. இதையடுத்து அதிகாரிகளும் வந்து விளக்குகளின் வெளிச்சத்தை கருவி கொண்டு சோதனை செய்தனர்.

தரையில் படும் வெளிச்சம், 3 அடி உயரத்தில் கிடைக்கும் வெளிச்சம் என அவர்கள் ஆய்வு செய்தனர். அதில் விளக்குகள் அனைத்தும் சரியானமுறையில் பொருத்தப்பட்டு 4 புறமும் சீரான வெளிச்சத்தை அளிப்பதாக தெரிவித்தனர். மேலும் இதற்காக ஜெனரேட்டரும் அமைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தஞ்சை மாவட்ட விளையாட்டு அதிகாரி ராமசுப்பிரமணியராஜாவிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-

தஞ்சையில் செயற்கை இழை தடகள ஓடுபாதைக்காக உயர்கோபுர மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கு மின் இணைப்பு கொடுப்பதற்கான பணிகளும் நடைபெற்று வருகின்றன. இன்னும் ஒரு வாரத்தில் மின் இணைப்பும் கொடுக்கப்பட்டு விடும். இதையடுத்து செயற்கை இழை தடகள ஓடுபாதை அமைக்கும் பணி தொடங்கும். இப்பணி முழுமையாக முடிவடைந்த பிறகு, தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டு அரங்கம் உலகத் தரம் வாய்ந்த தடகள ஓடுபாதை கொண்ட மைதானம் என்ற நிலையை அடைந்துவிடும்.

இங்கு செயற்கை இழை தடகள ஓடுபாதை அமைக்கப்பட்ட பின்னர் சர்வதேச, தேசிய தடகளப் போட்டிகள் நடத்தக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். இதில், மின்னொளி அமைக்கப்படுவதால், இரவு, பகலாகப் போட்டிகளை நடத்தலாம். தற்போது மாநில அளவிலான தடகள போட்டிகளில் வெற்றி பெற்று, தேசிய அளவிலான போட்டிக்கு செல்லும் தஞ்சையை சேர்ந்த வீரர்கள் சென்னை, திருச்சிக்கு சென்று பயிற்சி மேற்கொள்ள வேண்டிய நிலை உள்ளது. இதனால், வீரர்களுக்கு அலைச்சலும், பொருள்செலவும் ஏற்படுகிறது. தஞ்சையில் அமைக்கப்படும் செயற்கை இழை தடகள ஓடுபாதை மூலம், மேலும் பல வீரர்கள் தேசிய, சர்வதேச அளவிலான போட்டிக்குத் தகுதி பெறுவதற்கு வாய்ப்பாக அமையும்”என்றார்.

Next Story