சேவூர் பகுதியில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை: குலை தள்ளிய 2 ஆயிரம் வாழைகள் முறிந்தன, விவசாயிகள் கவலை


சேவூர் பகுதியில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை: குலை தள்ளிய 2 ஆயிரம் வாழைகள் முறிந்தன, விவசாயிகள் கவலை
x
தினத்தந்தி 15 Oct 2019 10:30 PM GMT (Updated: 15 Oct 2019 7:25 PM GMT)

சேவூர் பகுதியில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. இந்த சூறாவளி காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் குலை தள்ளிய 2 ஆயிரம் வாழைகள் முறிந்தன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

சேவூர்,

சேவூரில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்தது. வெப்பத்தின் தாக்கம் அதிகம் இருந்தது. மேலும் அவ்வப்போது சாரல் மழை பெய்தது. இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் திடீரென்று சூறாவளிகாற்று வீசியது. பின்னர் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் சேவூர், பாப்பாங்குளம், போத்தம்பாளையம், ஆலத்தூர், மங்கரசு வலையபாளையம், கானூர், முறியாண்டம்பாளையம், தண்டுக்காரன் பாளையம், பொங்கலூர் உள்ளிட்ட பகுதிகளில் 2 மணி நேரம் மழை நீடித்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

சூறாவளி காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் முறியாண்டம்பாளையம், ஆலத்தூர், வடுகபாளையம், பாப்பாங்குளம், மங்கரசு வலையபாளையம், பொங்கலூர், தண்டுக்காரன்பாளையம், கானூர் ஆகிய பகுதியில் குலை தள்ளி அறுவடைக்கு தயாராக இருந்த வாழை மரங்கள் முறிந்தன. இதில் 2 ஆயிரம் வாழை மரங்கள் முறிந்து விட்டன.

பல்வேறு இடங்களில் கடன் வாங்கி சாகுபடி செய்த நிலையில், வாழைகள் குலை தள்ளி விளைந்து விட்டதாகவும், இன்னும் 10 அல்லது 15 நாட்களில் அறுவடை செய்யலாம் என்றும், ஆனால் தற்போது சூறாவளி காற்றால் வாழைகள் முறிந்து விட்டதால், வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதோடு, வாங்கிய கடன்களை எப்படி அடைக்கப்போகிறோமோ? என்று கவலை அடைந்து இருப்பதாக விவசாயிகள் கூறினார்கள்.

இதே போல் சேவூர் பந்தம்பாளையத்தை சேர்ந்த அவினாசியப்பன் என்பவருக்கு சொந்தமான பாலத்தோட்டத்தில் 2 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த கரும்பு சாய்ந்தது. இந்த கரும்பு இன்னும் நான்கு மாதத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் சாய்ந்து விட்டது. இதனால் அவருக்கு வருமான இழப்பு ஏற்பட்டு உள்ளது.

மழை காரணமாக காடுகளில் புற்கள் செழித்து வளர்ந்து இருப்பதாகவும், இதனால் ஆடு மற்றும் மாடுகளுக்கு போதுமான தீவனம் கிடைக்கும் என்று அந்த பகுதி விவசாயிகள் தெரிவித்தனர். மேலும் சேவூர் பகுதியில் மானாவாரியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்களுக்கும் இந்த மழை போதுமானதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

சேவூர் பகுதியில் சூறாவளி காற்றுடன் மழை பெய்ததால் நேற்று முன்தினம் இரவு 10 மணி முதல் 11 மணிவரை மின் வினியோகம் தடைபட்டது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர்.

Next Story