சேலத்தில் பெண்ணை மிரட்டி பலாத்காரம்: ஆட்டோ டிரைவர் மீது குண்டர் சட்டம் பாய்கிறது?


சேலத்தில் பெண்ணை மிரட்டி பலாத்காரம்: ஆட்டோ டிரைவர் மீது குண்டர் சட்டம் பாய்கிறது?
x
தினத்தந்தி 16 Oct 2019 4:30 AM IST (Updated: 16 Oct 2019 2:53 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் பெண்ணை மிரட்டி பலாத்காரம் செய்த ஆட்டோ டிரைவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

கொண்டலாம்பட்டி, 

சேலம் மாவட்டம் காகாபாளையம் அடுத்த செல்லியம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ் (வயது 42). ஆட்டோ டிரைவரான இவர், ஒரு பெண்ணை மிரட்டி பலாத்காரம் செய்யும் வீடியோ வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இது தொடர்பாக கொண்டலாம்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து மோகன்ராஜை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இதனிடையே, சிறையில் அடைக்கப்பட்ட அவரை 7 நாட்கள் காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மோகன்ராஜ் பயன்படுத்திய செல்போனை ஆய்வு செய்தபோது, அதில் பாதிக்கப்பட்ட பெண்ணை மிரட்டி பலாத்காரம் செய்யும் வீடியோவும், மேலும் சில பெண்களின் ஆபாச வீடியோவும் இருப்பது தெரியவந்தது. அந்த பெண்களின் விவரத்தை சேகரித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மோகன்ராஜின் நண்பர்களான ஆட்டோ டிரைவர்கள் சதாசிவம், மணிகண்டன் ஆகியோரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதுகுறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் கூறியதாவது:-

கைது செய்யப்பட்ட மோகன்ராஜிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதில் பல பெண்களுடன் அவருக்கு தொடர்பு இருந்தது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக மோகன்ராஜ் முக்கிய தகவல்களை தெரிவித்து உள்ளார். அவர் தெரிவித்த நபர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள். அவர் போதுமான தகவல்களை தெரிவித்து விட்டதால் இன்று (புதன்கிழமை) அல்லது நாளை (வியாழக்கிழமை) கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க உள்ளோம்.

மேலும் பாதிக்கப்பட்ட பெண்கள் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க முன் வர வேண்டும். அவர்களின் தகவல்கள் வெளியே தெரியாமல் ரகசியம் காக்கப்படும். இதனால் பயப்படாமல் புகார் அளிக்க வேண்டும். இதைத்தொடர்ந்து ஆட்டோ டிரைவர் மோகன்ராஜ் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story