குன்னூர், கோத்தகிரியில் கனமழைக்கு வீடுகள் சேதம்; விவசாய நிலங்கள் தண்ணீரில் மூழ்கின


குன்னூர், கோத்தகிரியில் கனமழைக்கு வீடுகள் சேதம்; விவசாய நிலங்கள் தண்ணீரில் மூழ்கின
x
தினத்தந்தி 15 Oct 2019 9:45 PM GMT (Updated: 15 Oct 2019 9:23 PM GMT)

குன்னூர், கோத்தகிரியில் கனமழைக்கு வீடுகள் சேதம் அடைந்தன. விவசாய நிலங்கள் தண்ணீரில் மூழ்கின. சாலைகளில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இரவில் மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் நள்ளிரவில் ஊட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. அப்போது மின்தடை ஏற்பட்டதால், ஊட்டி நகரமே இருளில் மூழ்கியது. மஞ்சூர், எடக்காடு, எமரால்டு, இத்தலார், மணியட்டி, மீக்கேரி, பெங்கால்மட்டம், கைக்காட்டி, காத்தாடி மட்டம் ஆகிய பகுதிகளில் கனமழையால் சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. மஞ்சூர் அருகே சாம்ராஜ் கிரு‌‌ஷ்ணன் கோவில் அருகில் சாலையில் மரம் விழுந்தது. இதனால் அந்த வழியே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதுகுறித்து தகவல் அறிந்த நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் பாலச்சந்திரன் தலைமையிலான பணியாளர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் மின் வாள் மூலம் மரத்தை வெட்டி அகற்றினர். சுமார் 2 மணி நேரத்துக்கு பிறகு மீண்டும் அந்த வழியே போக்குவரத்து தொடங்கியது. மேலும் தேவர்சோலை-ஊட்டி சாலையில் 2 இடங்களில் மரம் விழுந்தது. அதனை நெடுஞ்சாலைத்துறையினர் வெட்டி அகற்றினர். கீழ்குந்தா அருகே உள்ள முள்ளிமலை பூதியாடாவுக்கு செல்லும் சாலையில் விழுந்த மரத்தை பேரூராட்சி ஊழியர்கள் வெட்டி அகற்றினர். கனமழை காரணமாக கெத்தை அணை நிரம்பியது. இதனால் அணையில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டு உள்ளது. மேலும் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது.

குன்னூர் அருகே உள்ள பாய்ஸ் கம்பெனி பகுதியில் ஜோசப் என்பவரது வீட்டின் பின்புறம் இருந்த தடுப்புச்சுவர் கனமழைக்கு இடிந்து விழுந்தது. அப்போது அதனருகில் நிறுத்தப்பட்டு இருந்த கார் மற்றும் மோட்டார் சைக்கிள் சேதம் அடைந்தது. சிங்கார தோப்பு குடியிருப்பு பகுதியில் சாந்தசீலன், டிசோசா, சாந்தா குரூஸ், பிலோமின் குமார், கோவிந்தன் ஆகிய 5 பேரின் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. அந்த வீடுகளில் வசித்து வந்தவர்கள் மீட்கப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை வெலிங்டன் கன்டோன்மெண்ட் தலைமை நிர்வாக அதிகாரி பூஜா பலிச்சா, துணைத்தலைவர் பாரதியார் மற்றும் கவுன்சிலர்கள் ஆய்வு செய்தனர். இதற்கிடையில் கனமழை காரணமாக ரேலியா அணை தனது முழு கொள்ளளவான 43.7 அடியை எட்டியது. இதைத்தொடர்ந்து அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு உள்ளது.

கோத்தகிரி தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது. கனமழைக்கு கொணவக்கரை, கட்டபெட்டு, குமரன் காலனி, கீழ்ஹட்டி உள்ளிட்ட பகுதிகளில் 19 வீடுகள் சேதம் அடைந்தன. இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண தொகையை தாசில்தார் மோகனா வழங்கினார். காவிலோரையில் 25 ஏக்கர் விவசாய நிலங்களுக்குள் மழைநீர் தேங்கியதால், பயிர்கள் அழுகின. காவிலோரையில் இருந்து நெடுகுளா செல்லும் சாலையில் உள்ள தரைப்பாலத்துக்கு மேலே மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அந்த வழியே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து வருவாய்த்துறையினர் விரைந்து சென்று தரைப்பாலத்துக்கு கீழே ஏற்பட்ட அடைப்பை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றினர். அதன்பின்னர் தரைப்பாலத்துக்கு மேலே மழைநீர் செல்வது நின்றது. இதனால் மீண்டும் அந்த வழியே போக்குவரத்து தொடங்கியது. குயின்சோலை பகுதியில் உள்ள பாலத்துக்கு கீழ் பகுதியில் நேற்று முன்தினம் இரவு கணபதிபுரத்தை சேர்ந்த சதீ‌‌ஷ், சரவணன் ஆகியோர் தங்களது ஸ்கூட்டர்களை நிறுத்திவிட்டு சென்றிருந்தனர். நள்ளிரவு பெய்த கனமழையால் ஸ்கூட்டர்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன.

இந்த நிலையில் நேற்று காலை ஊட்டி, மஞ்சூர், கோத்தகிரி, குன்னூர் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. மதியத்துக்கு மேல் மீண்டும் கனமழை கொட்டியது. நீர்நிலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் கடுங்குளிர் நிலவுவதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

இதற்கிடையில் மஞ்சூர் அருகே குந்தா ராமைய்யா பாலம் அருகில் நிலச்சரிவு ஏற்பட்டது. மேலும் பாறைகள் உருண்டு சாலையில் விழுந்தன. இதனால் அந்த வழியே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பழைய தாலுகா அலுவலகம் அருகில் மண் சரிவு ஏற்பட்டு, சாலை சேதம் அடைந்தது. உடனே சாலை பணியாளர்கள் பொக்லைன் எந்திரம் மூலம் சீரமைப்பு பணிகளை மேற்கொண்டனர்.

Next Story