நாமக்கல்லில் நடந்த இரட்டைக்கொலையில் போலீஸ் தேடிய வாலிபர் கோவை கோர்ட்டில் சரண்
நாமக்கல்லில் நடந்த இரட்டைக்கொலை வழக்கில் போலீஸ் தேடிய வாலிபர் கோவை கோர்ட்டில் சரண் அடைந்தார்.
கோவை,
நாமக்கல் காமராஜர் நகரை சேர்ந்தவர் விமல்ராஜ் (வயது26). இவர் பஸ்நிலையத்தில் பழக்கடை நடத்தி வந்தார். இவருடைய மனைவி அனிதா(23). இந்த தம்பதிக்கு 7 மாத பெண் குழந்தை உள்ளது. விமல்ராஜ் மாமனார் வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு வீட்டுக்குள் புகுந்த மர்ம கும்பல் விமல்ராஜ், அவருடைய மனைவி அனிதா ஆகியோரை சரமாரியாக வெட்டியது. இதை தடுக்க வந்த அனிதாவின் தந்தை கருப்பசாமி(50) என்பவரையும் அரிவாளால் வெட்டிவிட்டு அந்த கும்பல் தப்பி ஓடிவிட்டது.
இந்த கொடூர தாக்குதலில் விமல்ராஜ், அனிதா ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கருப்பசாமி, நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொலையாளிகளை பிடிக்க நாமக்கல் போலீசார் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இதில்,. நாமக்கல் பஸ்நிலையத்தில் எலெக்டிரிக்கல் பொருட்களை தள்ளுவண்டியில் வைத்து வியாபாரம் செய்து வந்த நிக்கல்சன்(34) என்பவர் கூலிப்படையினருடன் சேர்ந்து இந்த படுகொலைகளை செய்தது தெரியவந்தது. எனவே நிக்கல்சனை போலீசார் தேடி வந்தனர்.
இந்தநிலையில் நிக்கல்சன், கோவை 5-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நீதிபதி இனியா கருணாகரன் முன்னிலையில் நேற்று மாலை சரண் அடைந்தார். அவரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து நிக்கல்சன் கோவை சிறையில் அடைக்கப்பட்டார்.
சரண் அடைந்த நிக்கல்சனை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க, நாமக்கல் போலீசார் கோர்ட்டில் மனுதாக்கல் செய்ய முடிவு செய்துள்ளனர்.
Related Tags :
Next Story