சங்கரன்கோவில் சங்கர நாராயண சுவாமி கோவிலில் ஐப்பசி திருவிழா கொடியேற்றம்
சங்கரன்கோவில் சங்கர நாராயண சுவாமி கோவிலில் ஐப்பசி திருவிழா கொடியேற்றம் நேற்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
சங்கரன்கோவில்,
சங்கரன்கோவில் சங்கர நாராயண சுவாமி கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு திருவனந்தல் பூஜை நடைபெற்றது. தொடர்ந்து கொடிபட்டம் ரத வீதி உலா நடைபெற்றது. காலை 6.40 மணிக்கு அம்மன் சன்னதி முன்புள்ள தங்க கொடிமரத்தில் கொடி ஏற்றும் வைபவம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
12 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் தினமும் காலை, மாலை, இரவு நேரங்களில் அம்பாள் வீதி உலா நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாண நிகழ்ச்சி வரும் 25-ந் தேதி (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.
திருக்கல்யாணத்தை முன்னிட்டு காலை 10 மணிக்கு கோமதி அம்மன் மண்டகப்படி செல்லும் நிகழ்ச்சியும், அதனைத்தொடர்ந்து மாலை 5 மணிக்கு மேல் சங்கரன்கோவில் தேர் நிலையம் அருகே சங்கரலிங்க சுவாமி ரிஷப வாகனத்தில் கோமதி அம்மனுக்கு காட்சி கொடுக்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
அதனைத்தொடர்ந்து மணப்பெண் அலங்காரத்தில் எழுந்தருளி இருக்கும் கோமதி அம்மனுக்கு இரவு 11 மணிக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறுகிறது. 26-ந் தேதி சுவாமி, அம்பாள் பட்டின பிரவேசம் செல்லும் நிகழ்ச்சி நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர், மண்டகப்படிதாரர்கள் செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story