பெங்களூருவில் பயங்கரவாதிகள் ஊடுருவல் எதிரொலி: போலீஸ் அதிகாரிகளுடன் மந்திரி அவசர ஆலோசனை
பெங்களூருவில் பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பதாக தேசிய புலனாய்வு முகமை எச்சரிக்கை விடுத்த நிலையில் உயர் போலீஸ் அதிகாரிகளுடன் மந்திரி பசவராஜ் பொம்மை அவசர ஆலோசனை நடத்தினார். இதில் பெங்களூருவில் பயங்கரவாத ஒழிப்பு படை அமைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு,
டெல்லியில் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) சார்பில் பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், தேசிய புலனாய்வு அமைப்பின் டைரக்டர் ஜெனரல் யோகேஷ் சந்தர் மோடி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அப்போது கர்நாடகத்தில் வங்காள தேசத்தின் ஜமாதுல் உல் முஜாகித்தீன் அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகள் சதிவேலை நடத்த இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேலும் பெங்களூருவில் 20 முதல் 22 பயங்கரவாதிகள் செயல்பட்டு வருவதாக அதிகாரி கூறினார்.
இந்த நிலையில் நேற்று கர்நாடக போலீஸ் மந்திரி பசவராஜ் பொம்மை பெங்களூரு மாநகர உயர் போலீஸ் அதிகாரிகளுடன் அவசரமாக ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் பாஸ்கர் ராவ், கூடுதல் போலீஸ் கமிஷனர் முருகன், மத்திய குற்றப்பிரிவு இணை கமிஷனர் சந்தீப் பட்டீல், துணை போலீஸ் கமிஷனர்கள் உள்பட உயர் போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அப்போது சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பு குறித்தும், பெங்களூரு நகரில் முக்கிய இடங்களில் உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது. மேலும் தேசிய புலனாய்வு முகமை எச்சரிக்கை விடுத்த பயங்கரவாதிகள் குறித்து தீவிரமாக ஆலோசனை நடத்தப்பட்டது. பெங்களூரு பயங்கரவாத ஒழிப்புபடையை உருவாக்குவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
இந்த வேளையில் பயங்கரவாத செயலில் ஈடுபடுபவர்களை கண்டுபிடிக்க வேண்டும். பிற மாநிலங்களில் இருந்து பெங்களூருவுக்கு வரும் பாதைகளில் சோதனைச்சாவடிகள் அமைத்து தீவிர வாகன சோதனை நடத்த வேண்டும். சந்தேகப்படும் படியாக யாரேனும் இருந்தால் அவர்களை பிடித்து விசாரணை நடத்த வேண்டும். சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க அனைத்து அதிகாரிகளும் ஒற்றுமையாக பணி செய்ய வேண்டும். பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். எந்த காரணத்தை கொண்டும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாத வகையில் முன்னெச்சரிக்கையாக செயல்பட வேண்டும்.
பெங்களூரு நகரில் உள்ள விதானசவுதா, விகாசசவுதா, ஐகோர்ட்டு, விமான நிலையம், ரெயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், வழிபாட்டு தலங்கள், வணிக வளாகங்கள், மெட்ரோ ரெயில் நிலையங்கள், மார்க்கெட்டுகள், பிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்பட மக்கள் அதிகமாக கூடும் பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும். போலீசாரின் ரோந்து பணியை அதிகரிக்க வேண்டும். கடல் வழியாக பயங்கரவாதிகள் பெங்களூருவுக்குள் நுழைய வாய்ப்பு உள்ளது. இதனால் கடலோர கடற்படையினருடன் நேரடியாக தொடர்பு வைத்திருக்க வேண்டும். மத்திய உளவுத்துறை, மாநில உளவுத்துறையுடன் கைகோர்த்து பயங்கரவாத செயல்களை முறியடித்து கர்நாடகத்தை அமைதி பூங்காவாக திகழ வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மந்திரி பசவராஜ் பொம்மை உத்தரவு பிறப்பித்தார்.
இந்த ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு பசவராஜ் பொம்மை நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பெங்களூரு நகரில் 20 முதல் 22 பயங்கரவாதிகள் செயல்பட்டு வருவதாக தேசிய புலனாய்வு முகமை எச்சரித்துள்ளது. இதுகுறித்து உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளேன். மேலும் பெங்களூருவுக்கு பயங்கரவாத அச்சுறுத்தல் இருப்பதால் அதுபற்றி விசாரணை நடத்த தனிப்படை அமைக்கப்படுகிறது. அதன்படி அடுத்த மாதம் (நவம்பர்) 1-ந் தேதி முதல் பெங்களூருவுக்கு என்று தனியாக பயங்கரவாத ஒழிப்பு படை செயல்பட உள்ளது.
இதுதவிர துணை போலீஸ் கமிஷனர்கள் கட்டுப்பாட்டில் தொழில்நுட்ப குற்ற பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அமைக்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.
போலீசாருக்கு சம்பளத்தை உயர்த்தி வழங்க பரிந்துரைக்கும் ராகவேந்திர அறிக்கையையும், 6-வது சம்பள கமிஷன் பரிந்துரை குறித்தும் முதல்-மந்திரி எடியூரப்பாவுடன் ஆலோசனை நடத்தி உள்ளேன். பிற துறை ஊழியர்கள், அதிகாரிகளை ஒப்பிடும்போது போலீஸ் துறையில் உள்ளவர்கள் அதிக நேரம் பணி செய்கிறார்கள். இதனால் விரைவில் போலீசாருக்கு சம்பள உயர்வு வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story