2 மகன்களும் கவனிக்காததால் விரக்தி: வைகை ஆற்றில் குதித்து பெண் தற்கொலை முயற்சி


2 மகன்களும் கவனிக்காததால் விரக்தி: வைகை ஆற்றில் குதித்து பெண் தற்கொலை முயற்சி
x
தினத்தந்தி 16 Oct 2019 10:00 PM GMT (Updated: 16 Oct 2019 4:29 PM GMT)

ஆண்டிப்பட்டி அருகே 2 மகன்களும் கவனிக்காததால், வைகை ஆற்றில் குதித்து பெண் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.

ஆண்டிப்பட்டி,

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள ஜம்புலிபுத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் மரகதம் (வயது 55). அவருடைய கணவர், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். மரகதத்தின் 2 மகன்களும் திருமணமாகி திண்டுக்கல், திருப்பூரில் வசித்து வருகின்றனர். கணவர் இறந்த பிறகு மரகதம் தனியாக வசித்து வருகிறார்.

அப்பகுதியில் உள்ள வீடுகளில் வீட்டு வேலை செய்து அவர் பிழைப்பு நடத்தி வருகிறார். அவருடைய 2 மகன்களும் மரகதத்தை கவனிக்கவில்லை என்று கூறப்படுகிறது. தனிமை வாட்ட, தனது மகன்களும் தன்னை கவனிக்கவில்லை என்ற விரக்தியில் அவர் மனம் உடைந்து காணப்பட்டார். மேலும் அவர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.

இதனையடுத்து வைகை அணை அருகே ஆண்டிப்பட்டி-பெரியகுளம் சாலையில் உள்ள பாலத்துக்கு மரகதம் வந்தார். பின்னர் பாலத்தில் இருந்து வைகை ஆற்றுக்குள் திடீரென குதித்தார். தற்போது வைகை அணையில் இருந்து பாசனத்துக்கு வினாடிக்கு 1,200 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதனால் ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடியது.

ஆழமான பகுதியில் குதித்த மரகதம் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார். பாலத்தில் இருந்து 200 மீட்டர் தூரம் சென்ற நிலையில் அங்கிருந்த ஆகாயதாமரை செடிகளில் அவர் சிக்கி உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இதனை கண்ட சிலர், ஆற்றில் குதித்து தண்ணீரில் தத்தளித்து கொண்டிருந்த மரகதத்தை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த வைகை அணை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியம்மாள் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்தனர். பின்னர் அவருக்கு அறிவுரை கூறிய போலீசார், தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக மரகதத்தை அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பெற்ற மகன்கள் கவனிக்காததால், தாய் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் ஆண்டிப்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story