நோய் தாக்குதல் எதிரொலி: மக்காச்சோள பயிரில் மருந்து தெளிக்கும் பணி - கலெக்டர் தொடங்கி வைத்தார்


நோய் தாக்குதல் எதிரொலி: மக்காச்சோள பயிரில் மருந்து தெளிக்கும் பணி - கலெக்டர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 16 Oct 2019 10:30 PM GMT (Updated: 16 Oct 2019 4:33 PM GMT)

நோய் தாக்குதல் எதிரொலியாக, மக்காச்சோள பயிரில் மருந்து தெளிக்கும் பணியை கலெக்டர் பல்லவி பல்தேவ் தொடங்கி வைத்தார்.

கண்டமனூர்,

தேனி மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக தொடர்மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கம்பு, சோளம் மக்காச்சோளம், தட்டைப்பயிறு, உளுந்து உள்ளிட்ட மானாவாரி பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர். இந்தநிலையில் மக்காச்சோள பயிரில் நோய் தாக்குதல் அதிகரித்துள்ளது. இதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டர் பல்லவி பல்தேவிடம் விவசாயிகள் கோரிக்கை மனு கொடுத்தனர். அதன்பேரில் நோய் தாக்குதலை கட்டுப்படுத்த கலெக்டர் உத்தரவு பிறப்பித்தார். இதனையடுத்து வேளாண்மைத்துறை சார்பில், மக்காச்சோள பயிர்களுக்கு விலையில்லா மருந்து தெளிக்கும் பணி தொடங்கியது.

ஆண்டிப்பட்டி அருகே ரோசனைபட்டி கிராமத்தில் நடந்த மருந்து தெளிக்கும் பணியை கலெக்டர் பல்லவி பல்தேவ் தொடங்கி வைத்தார். மேலும் மக்காச்சோள பயிரை தாக்கிய படைப்புழுக்கள் குறித்து விவசாயிகளிடம் அவர் கேட்டறிந்தார். இது குறித்து வேளாண்மைத் துறை அதிகாரி கூறியதாவது:-

தேனி மாவட்டத்தில் தற்போது சாகுபடி செய்யப்பட்டுள்ள மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதல் அதிகமாக உள்ளது. வேளாண் துறை மூலம் மாவட்டத்தில் 87 ஹெக்டேர் நிலங்களில் 100 சதவீத மானியத்தில் மருந்து தெளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக ஆண்டிப்பட்டி பகுதியில் 25 ஹெக்டர் பரப்பளவில் ஒரே கட்டமாக 5 தெளிப்பான்களை கொண்டு மருந்து தெளிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

படைப்புழுக்களை கட்டுப்படுத்த 10 லிட்டர் தண்ணீரில் 80 கிராம் மெட்ரோரைசியம் கரைசலை கலந்து தெளிக்க வேண்டும். மருந்து தெளித்த 4 முதல் 7 நாட்களுக்குள் புழுக்கள் இறந்து விடும். விவசாயிகள் இந்த மருந்தை வாங்கி தெளித்து பயன் பெறலாம். மேலும் இது தொடர்பான விவரங்களுக்கு வட்டார வேளாண்மை அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் இவ்வாறு அவர் கூறினார். இந்த நிகழ்ச்சியில் வேளாண்துறை இணை இயக்குனர் ஜவகரி பாய், உதவி இயக்குனர் ராஜசேகர், மாவட்ட ஆலோசகர் அப்துல் நசீம் மற்றும் மதுரை வேளாண்மை கல்லூரி மாணவிகள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Next Story