வங்கிகளில் இன்டர்நெட் சேவை பாதிப்பு - முதியோர் உதவித்தொகை பெற வந்தவர்கள் தவிப்பு
ஆரணி பகுதியில் வங்கிகளில் இன்டர்நெட் சேவை பாதிப்பால் முதியோர் உதவித்தொகை மற்றும் 100 நாள் வேலை திட்டத்தில் கூலி பெற வந்தவர்கள் தவிப்படைய நேரிட்டு வருகிறது.
ஆரணி,
ஆரணி நகரிலும், சுற்று வட்டார பகுதிகளிலும் அரசு அலுவலகங்கள், வங்கிகள்செயல்பாடுகள் இன்டர்நெட் சேவை மூலம்தான் நடக்கின்றன. வங்கிகளில் பணம் எடுப்பது, பணம் டெபாசிட் செய்வது உள்பட அனைத்தும் இன்டர்நெட் எனப்படும் இணைய சேவையிலேயே செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ஆரணி பகுதியில் இன்டர்நெட் சேவை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வங்கிகளில் பணம் செலுத்துபவர்களும், பணம் எடுப்பவர்களும் மிகவும் சிரமத்துக்குள்ளாகின்றனர். ஒருசிலவங்கிகளில் பணத்தை பெற்றுக் கொண்டு சிறிது நேரம் கழித்து வரவு செய்து கொள்ளும் நிலை இருந்து வருகிறது. பெரும்பாலான வங்கிகளில் டெபாசிட் செய்ய வந்தவர்கள் பணத்தை கையில் வைத்துக் கொண்டு நெட் சேவை வரும்வரை காத்திருக்கின்றனர். இதனால் பணம் கொள்ளை போகும் சம்பவங்களும் நடைபெற வாய்ப்பு உள்ளது.
மேலும் சில வங்கிகள் மூலம் அரசால் வழங்கப்பட்டு வருகிற முதியோர் உதவித் தொகை, 100 நாள் வேலைதிட்டத்தின் கூலி தொகை வங்கிகள் மூலம் வழங்கப்படுகிறது. ஆனால் இன்டர்நெட் சேவை பாதிப்பால் தொழிலாளர்களும், முதியோர்களும் வங்கி வாசலிலேயே காத்து கிடக்கின்றனர்.
இதேபோல் பிறப்பு, இறப்பு, வாரிசு சான்று உள்ளிட்ட சான்றுகள் பெற சேவை மையங்களில் பொதுமக்கள் மணிக்கணக்கில் காத்துக் கிடக்கின்றனர். மின் கட்டணம் செலுத்துபவர்களுக்கும் இதேநிலை.ஒருநாள் காலதாமதமாக செலுத்தினாலும் அபராதம் வசூலிக்கப்படுகிறது. இவற்றையெல்லாம் சரிசெய்ய தொலைத்தொடர்பு துறையினர் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபார சங்கங்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
Related Tags :
Next Story