மின்னல் தாக்கி இறந்த 4 பெண்களின் உடல்கள் அடக்கம் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்க வலியுறுத்தல்


மின்னல் தாக்கி இறந்த 4 பெண்களின் உடல்கள் அடக்கம் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்க வலியுறுத்தல்
x
தினத்தந்தி 17 Oct 2019 4:30 AM IST (Updated: 17 Oct 2019 1:35 AM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டை அருகே மின்னல் தாக்கி இறந்த 4 பெண்களின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டது. அவர்களது குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.

அன்னவாசல்,

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே உள்ள வைத்தூர் மற்றும் தொழுதாம்பட்டி கிராமங்களை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட பெண்கள் நேற்று முன்தினம் கீழமுத்துக்காடு பகுதியில் உள்ள வயலில் கடலை எடுத்து கொண்டிருந்தனர். அப்போது இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதில் வயலில் கடலை எடுத்து கொண்டிருந்த பெண்களை மின்னல் தாக்கியது. இதில் சாந்தி, விஜயா, லெட்சுமியம்மாள், கலைச்செல்வி ஆகிய 4 பெண்கள் பரிதாபமாக இறந்தனர். 25 பேர் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்த அனைவரும் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தநிலையில் இறந்து போன 4 பெண்களின் உடல்கள் நேற்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் 4 பெண்களின் உடல்களும் ஆம்புலன்ஸ் மூலம் வைத்தூர் கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, இறுதிச்சடங்குக்கு பின் அடக்கம் செய்யப்பட்டது. இதில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.

அரசு வேலை வழங்க வேண்டும்

இந்நிலையில் இறந்த பெண்களின் குடும்பத்திற்கு அரசு உதவி செய்ய வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து மின்னல் தாக்கி உயிரிழந்த விஜயாவின் உறவினர் ரங்கராஜ் கூறுகையில், இறந்து போன விஜயாவின் உழைப்பினை நம்பி தான் அவரது குடும்பத்தினர் வாழ்ந்து வந்தனர். அவரது கணவர் உடல் நிலை சரியில்லாமல் உள்ளார். 3 மகள்கள் உள்ளனர். விஜயா இறந்து போனதால் அவர்களது குடும்பத்தினர் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர். எனவே இவரது மகளில் ஒருவருக்கு மனிதநேயத்துடன் அரசு வேலை வழங்கி, தமிழக அரசு உதவிட வேண்டும் என்றார்.

சாந்தியின் மகன் அழகர்கண்ணன் கூறுகையில், எனது தந்தை கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்னர் இறந்து போனார். அதன்பின்னர் என்னை ஆளாக்கிய தாய் சாந்தி பிழைப்பிற்காக சென்றபோது மின்னல் தாக்கி இறந்து போனதால் நான் அனாதையாக நிற்கிறேன் என கதறி அழுதார்.

காசோலை வழங்கப்பட்டது

இந்நிலையில் காயம் அடைந்து அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை அரசியல் கட்சியினர் சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர். மேலும் தமிழக அரசின் சார்பில், உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்தினருக்கும் தலா ரூ.4 லட்சம் வழங்க தமிழக அரசு அறிவித்திருந்தது. இதையடுத்து நேற்று மாலை மின்னல் தாக்கி இறந்த 4 பெண்களின் குடும்பத்திற்கு ரூ.4 லட்சத்திற்கான காசோலையை மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி, ஆறுமுகம் எம்.எல்.ஏ. ஆகியோர் வழங்கி ஆறுதல் கூறினர்.


Next Story