மதுரை அருகே பெண்ணுக்கு மயக்க மருந்து கொடுத்து ரூ. 49 லட்சம் - தங்க நகை கொள்ளை; வீட்டில் தனியாக இருந்ததை நோட்டமிட்டு 2 பேர் கைவரிசை


மதுரை அருகே பெண்ணுக்கு மயக்க மருந்து கொடுத்து ரூ. 49 லட்சம் - தங்க நகை கொள்ளை; வீட்டில் தனியாக இருந்ததை நோட்டமிட்டு 2 பேர் கைவரிசை
x
தினத்தந்தி 17 Oct 2019 5:00 AM IST (Updated: 17 Oct 2019 3:26 AM IST)
t-max-icont-min-icon

வீட்டில் தனியாக இருந்த வியாபாரியின் மனைவியை கத்தியை காட்டி மிரட்டி, மயக்க மருந்து கொடுத்து ரூ.49 லட்சம் மற்றும் தங்க நகைகளை கொள்ளையடித்துவிட்டு தப்பிய 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

திருமங்கலம்,

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள எஸ்.பி.நத்தம் பெருமாள்பட்டியை சேர்ந்தவர் பாண்டிக்கண்ணன்(வயது 45). இவர் கம்பு, சோளம், கேழ்வரகு உள்ளிட்ட பல நவதானியங்கள் வாங்கி விற்கும் கமிஷன் கடை நடத்தி வருகிறார். மேலும் ஆடு, கோழிகளை மொத்தமாக வாங்கியும் விற்பனை செய்து வருகிறார். இவரது வீடு அந்த கிராமத்தில் ஒதுக்குப்புறமாக அமைந்துள்ளது.

இந்தநிலையில் பாண்டிக்கண்ணன் நேற்று காலை திருமங்கலத்திற்கு வியாபார விஷயமாக சென்றிருந்தார். இதனால் அவரது மனைவி ராமலட்சுமி (33) மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.

பாண்டிக்கண்ணன் வெளியே சென்ற சிறிது நேரத்தில் 2 பேர் அங்கு வந்துள்ளனர். அவர்கள் ராமலட்சுமியிடம், பாண்டிக்கண்ணன் வீட்டில் இருக்கிறாரா? என கேட்டனர். மேலும் ஆடு வாங்க வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

பின்னர் குடிக்க தண்ணீர் வேண்டும் என்று ராமலட்சுமியிடம் அவர்கள் கேட்டுள்ளனர். தண்ணீர் எடுக்க உள்ளே சென்ற ராமலட்சுமியை பின்தொடர்ந்து சென்ற அந்த 2 பேரும் திடீரென ராமலட்சுமியின் கழுத்தில் கத்தியை வைத்து, சத்தம் போடக்கூடாது என்று கூறி மிரட்டினர். அத்துடன் மயக்க மருத்தை முகத்தில் வைத்து, மயக்கம் அடைய செய்தனர்.

பின்னர் வீட்டில் இருந்த இரும்பு பெட்டியை உடைத்து, வியாபாரத்துக்கு வைத்து இருந்த ரூ.49 லட்சம் மற்றும் 15 பவுன் நகையை கொள்ளையடித்துவிட்டு தப்பிச்சென்றனர்.

இதற்கிடையே திருமங்கலம் சென்ற பாண்டிக்கண்ணன் வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டில் மனைவி ராமலட்சுமி மயங்கி கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவரை எழுப்பி கேட்ட போது, நடந்த விவரத்தை கூறியுள்ளார். இதையடுத்து வீட்டினுள் சென்று பார்த்தபோது, இரும்பு பெட்டி உடைக்கப்பட்டு பணம், நகை கொள்ளை போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து பாண்டிக்கண்ணன் உடனடியாக கள்ளிக்குடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் திருமங்கலம் துணை போலீஸ் சூப்பிரண்டு அருண் தலைமையிலான போலீசார் கொள்ளை நடந்த வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினர். அத்துடன் தடயவியல் நிபுணர்கள் வந்து தடயங்களை பதிவு செய்தனர்.

மேலும் மதுரையில் இருந்து மோப்பநாய் பொற்கை வரவழைக்கப்பட்டு, அது கொள்ளை நடந்த வீட்டில் மோப்பம் பிடித்துவிட்டு, வீட்டின் முன்புறம் சுற்றி வந்து சிறிது தூரம் ஓடி நின்றது. யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை.

இந்த கொள்ளை தொடர்பாக போலீசார் கூறும் போது, “பாண்டிக்கண்ணன் வெளியே சென்றதை நோட்டமிட்டு, வீட்டில் அவருடைய மனைவி மட்டும் இருப்பதை உறுதி செய்துகொண்ட பின்புதான் மர்ம நபர்கள் இந்த துணிகர கொள்ளையை நடத்தி உள்ளனர். மேலும் ஆடு வாங்க வந்தவர்கள் போன்று பேசி உள்ளனர். எனவே பாண்டிக்கண்ணன் பற்றி நன்கு விசாரித்து அறிந்தவர்கள்தான் இந்த கொள்ளையை அரங்கேற்றி இருக்கலாம் என சந்தேகிக்கிறோம். விரைவில் கொள்ளையர்கள் பிடிபடுவார்கள்” என்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பிச் சென்ற 2 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த கொள்ளை அப்பகுதியில் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியது.

Next Story