உஸ்மனாபாத்தில் பரபரப்பு: தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் சிவசேனா எம்.பி.க்கு கத்திக்குத்து


உஸ்மனாபாத்தில் பரபரப்பு: தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் சிவசேனா எம்.பி.க்கு கத்திக்குத்து
x
தினத்தந்தி 17 Oct 2019 5:15 AM IST (Updated: 17 Oct 2019 5:03 AM IST)
t-max-icont-min-icon

உஸ்மனாபாத்தில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் சிவசேனா எம்.பி. கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மும்பை,

உஸ்மனாபாத் மாவட்டத்தில் உள்ள படோலி நய்காவ் கிராமத்தில் நேற்று பா.ஜனதா, சிவசேனா கூட்டணி கட்சி சார்பில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. இதில் உஸ்மனாபாத் தொகுதியை சேர்ந்த சிவசேனா எம்.பி. ஓம்ராஜே நிம்பல்கர் கலந்து கொண்டு பேசினார். கூட்டத்திற்கு பின்னர் ஓம்ராஜே நிம்பல்கரை சந்தித்து சிவசேனா தொண்டர்கள் கைகுலுக்கி கொண்டு இருந்தனர்.

அப்போது, கட்சி தொண்டர் போல நுழைந்த ஆசாமி ஒருவர் ஓம்ராஜே நிம்பல்கரை நெருங்கினார். திடீரென அந்த ஆசாமி தான் மறைத்து வைத்து இருந்த கத்தியால் அவரை குத்தினார்.

இதில் ஓம்ராஜே நிம்பல்கரின் கையில் குத்து விழுந்தது. இதில் ரத்தம் சொட்டியதால் அவர் வேதனையில் துடித்தார். இதை பார்த்து அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக ஓம்ராஜே நிம்பல்கரின் கையில் கட்டு போட்டனர். அவரது கையில் இருந்த கைக்கெடிகாரத்தில் கத்தி பட்டதால் பெரியளவில் காயம் ஏற்படாமல் தப்பினார். பின்னர் அவருக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதற்டையே ஓம்ராஜே நிம்பல்கர் எம்.பி.யை கத்தியால் குத்திய ஆசாமி யார் கையிலும் சிக்காமல் அங்கிருந்து வேகமாக தப்பி ஓடி விட்டார். இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு உண்டானது.

சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஓம்ராஜே நிம்பல்கர் எம்.பி.யை கத்தியால் குத்திய ஆசாமியை வலைவீசி தேடி வருகின்றனர்.

காங்கிரஸ் தலைவராக இருந்த ஓம்ராஜே நிம்பல்கரின் தந்தை பவன்ராஜே நிம்பல்கர் கடந்த 2006-ம் ஆண்டு ஜூன் 3-ந் தேதி மும்பை - புனே நெடுஞ்சாலையில் காரில் சென்று கொண்டிருந்த போது, துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் முன்னாள் எம்.பி. பத்மசிங் பாட்டீல் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

Next Story