கம்பம் பகுதியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகள் - கலெக்டர் ஆய்வு


கம்பம் பகுதியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகள் - கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 18 Oct 2019 3:15 AM IST (Updated: 17 Oct 2019 8:26 PM IST)
t-max-icont-min-icon

கம்பம் பகுதியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகளை கலெக்டர் பல்லவி பல்தேவ் ஆய்வு செய்தார்.

கம்பம்,

கம்பம் பகுதியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு மற்றும் சுகாதார பணிகளை கலெக்டர் பல்லவி பல்தேவ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதையொட்டி கம்பம் அரசு மருத்துவமனையில் உள்ள புறநோயாளிகள் பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு, கண்சிகிச்சை பிரிவு, டயாலிசிஸ் பிரிவு, மகப்பேறு பிரிவு, குழந்தைகள் பிரிவு, காய்ச்சல் பிரிவு உள்ளிட்டவற்றில் ஆய்வு மேற்கொண்ட அவர் அங்குள்ள நோயாளிகளிடம் உரிய சிகிச்சைகள் அளிக்கப்படுகிறதா? என்றும், தூய்மை பணிகள் குறித்தும் கேட்டறிந்தார்.

பின்னர் கம்பத்தில் உள்ள அம்மா உணவகத்தில் வைக்கப்பட்டிருந்த குடிநீர் மற்றும் உணவுகளை ஆய்வு செய்தார். மேலும் நகராட்சி தண்ணீர் தொட்டி வளாகம், நாராயணதேவன்பட்டி, காமயகவுண்டன்பட்டி, சுருளிப்பட்டி ஆகிய பகுதிகளிலும் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.

இதுதொடர்பாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கடந்த சில மாதங்களாக டெங்கு காய்ச்சல் மற்றும் வைரஸ் காய்ச்சல் பாதிப்பை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக அனைத்து பகுதிகளிலும் தூய்மை பணியினை மேற்கொள்வதால் தொற்று நோய் பரவாமல் தடுக்க இயலும் என்ற நோக்கிலும், தூய்மையாக பராமரிப்பதன் மூலம் டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் பரவுவதை தடுக்க இயலும் என்ற நோக்கிலும் வியாழக்கிழமை தோறும் டெங்கு காய்ச்சல் ஒழிப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது. அதன்படி இன்று (நேற்று) டெங்கு காய்ச்சல் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

அனைத்து சுகாதார பணியாளர்கள், உள்ளாட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், தூய்மை காவலர்கள், பள்ளி மாணவர்கள், சுயஉதவி குழுவினர், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு பணியாளர்கள் உள்ளிட்டோரை கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் அரசு அலுவலகங்கள், பொது இடங்கள், பள்ளி, கல்லூரிகள், தங்கும்விடுதி, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், குடியிருப்பு பகுதிகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு சென்று குடிநீர் தொட்டி, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் கொசுப்புழுக்கள் உற்பத்தி தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தேவையற்ற கழிவுபொருட்களை அகற்றுதல், டெங்கு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனை மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின் போது உத்தமபாளையம் சப்-கலெக்டர் வைத்திநாதன், மாவட்ட சுகாதார நலப்பணிகள் இணை இயக்குனர் சரஸ்வதி, மருத்துவமனை அலுவலர் டாக்டர் பொன்னரசன், டாக்டர் மகேஷ்பாண்டியன், வருவாய் ஆய்வாளர் செந்தில் ஆகியோர் உடனிருந்தனர்.

Next Story