தென்தாமரைகுளத்தில் துணிகரம் தனியார் நிறுவன அதிகாரி வீட்டில் கொள்ளை முயற்சி மர்மநபர்களுக்கு வலைவீச்சு


தென்தாமரைகுளத்தில் துணிகரம் தனியார் நிறுவன அதிகாரி வீட்டில் கொள்ளை முயற்சி மர்மநபர்களுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 18 Oct 2019 3:30 AM IST (Updated: 17 Oct 2019 8:10 PM IST)
t-max-icont-min-icon

தென்தாமரைகுளத்தில் தனியார் நிறுவன அதிகாரி வீட்டில் கதவை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

தென்தாமரைகுளம்,

தென்தாமரைகுளத்தை சேர்ந்தவர் கிறிஸ்டின் பாபு (வயது 53). இவர் குன்னூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு மனைவியும், இரண்டு மகள்களும் உள்ளனர். இவருடைய மனைவி குன்னூர் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். மேலும் மகள்களும் அங்கே உள்ள ஒரு பள்ளியில் படித்து வருகிறார்கள்.

இதற்கிடையே கிறிஸ்டின் பாபு தென்தாமரைகுளத்தில் சொந்தமாக புதிய வீடு ஒன்று கட்டினார். மேலும் அந்த வீட்டை பார்த்துக் கொள்ள தன்னுடைய உறவினரான சாஸ்தான்கோவில் விளையைச் சேர்ந்த நாராயணபெருமாள் என்பவரை கிறிஸ்டின்பாபு ஏற்பாடு செய்தார்.

வீட்டு கதவு உடைப்பு

இந்தநிலையில் நேற்று காலை நாராயண பெருமாள் தென்தாமரை குளத்தில் உள்ள கிறிஸ்டின் பாபுவின் வீட்டை பார்வையிட சென்றார். வீட்டின் முன்பக்க கதவை திறந்து பார்த்த போது வீட்டில் பொருட்கள் மற்றும் துணிகள் ஆங்காங்கே சிதறி கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். மேலும் வீட்டின் மாடியில் உள்ள கதவு, படுக்கை அறை கதவு மற்றும் பீரோ உடைக்கப்பட்டிருந்தன.

உடனே நாராயண பெருமாள் இதுகுறித்து வீட்டின் உரிமையாளர் கிறிஸ்டின் பாபுவிற்கு தகவல் தெரிவித்து விட்டு தென்தாமரைகுளம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதனை தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர்கள் மீனாகுமாரி, ஜான் கென்னடி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

கொள்ளை முயற்சி

விசாரணையில், வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் மாடி கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். பின்னர் பீரோவில் ஏதேனும் தங்க நகை, பணம் இருக்கிறதா என்று தேடியுள்ளனர். ஆனால் நகை, பணம் எதுவும் சிக்காததால் துணி மற்றும் பொருட்களை ஆவேசத்துடன் வீசி எறிந்து சென்றது தெரிய வந்தது.

மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு வீட்டில் பதிவாகியிருந்த கைரேகைகள் பதிவு செய்யப்பட்டன. இந்த துணிகர கொள்ளை முயற்சி சம்பவம் குறித்து தென்தாமரைகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story