தூத்துக்குடியில் இருந்து தேனிக்கு, 40 டன் நிலக்கரி ஏற்றி வந்த லாரி பின்னோக்கி ஓடியதால் பரபரப்பு


தூத்துக்குடியில் இருந்து தேனிக்கு, 40 டன் நிலக்கரி ஏற்றி வந்த லாரி பின்னோக்கி ஓடியதால் பரபரப்பு
x
தினத்தந்தி 18 Oct 2019 4:00 AM IST (Updated: 17 Oct 2019 10:03 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் இருந்து தேனிக்கு சுமார் 40 டன் நிலக்கரி ஏற்றி வந்த லாரி திடீரென பின்னோக்கி ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. டிரைவரின் சாமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

தேனி,

தூத்துக்குடியில் இருந்து தேனியில் உள்ள ஒரு ஆலைக்கு சுமார் 40 டன் நிலக்கரியை ஏற்றிக் கொண்டு ஒரு லாரி நேற்று வந்து கொண்டு இருந்தது. லாரியை தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் பகுதியை சேர்ந்த ரமே‌‌ஷ் என்பவர் ஓட்டி வந்தார். நேற்று காலை 8.30 மணியளவில் இந்த லாரி, தேனி கர்னல் ஜான் பென்னிகுவிக் பஸ் நிலையத்தை கடந்து புறவழிச்சாலையில் சென்று கொண்டு இருந்தது.

அந்த சாலையில் உள்ள பெரிய ஏற்றத்தில் லாரி ஏறிக் கொண்டு இருந்த போது, பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டு இருந்த ஒருவர், திடீரென லாரியை முந்திச் செல்ல முயன்றார். அவர் மீது லாரி மோதிவிடாமல் இருக்க டிரைவர் பிரேக் பிடித்துள்ளார். அதையொட்டி மோட்டார் சைக்கிளில் வந்தவர் மோதாமல் சென்று விட்டார்.

அதேநேரத்தில், லாரி சாலையில் உள்ள ஏற்றத்தில் ஏற முடியாமல் திணறியது. சிறிது நேரத்தில் அந்த லாரி பின்னோக்கி ஓடத் தொடங்கியது. டிரைவர் பிரேக் பிடிக்க முயன்றும் பலனின்றி லாரி பின்னோக்கி ஓடியது. ஏற்றத்தில் இருந்து இறக்கத்தை நோக்கி லாரி ஓடியதால், டிரைவர் பின்னால் வந்த வாகனங்களை நோக்கி கையால் சைகை காட்டிக் கொண்டும், லாரியில் ஒலி எழுப்பிக்கொண்டும் வந்தார்.

அப்போது பின்னால் பள்ளி, கல்லூரி வாகனங்கள் வந்து கொண்டு இருந்தன. அதேபோல், சாலையில் சிறிது தூரத்தில் ஒரு புறம் மின்சார டிரான்ஸ்பார்மரும், மற்றொரு புறம் மின்கம்பமும் இருந்தது. சுமார் 150 மீட்டர் தூரம் பின்னோக்கி லாரி வந்தது. இந்தநிலையில், டிரைவர் சாமர்த்தியத்துடன் செயல்பட்டு அவற்றின் மீது மோதாமல் இருக்க லாரியை சாலையோரம் இருந்த மலைக்கரடு பக்கம் திருப்பினார். அப்போது அங்கு நின்ற 2 மரங்களை லாரி வேரோடு சாய்த்துவிட்டு, அருகே இருந்த புதரில் இறங்கி நின்றது. மீண்டும் அங்கிருந்து லாரியை எடுக்க முடியவில்லை. இதனால் பொக்லைன் எந்திரம் அங்கு வரவழைக்கப்பட்டு லாரியை மீட்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.

பின்னோக்கி ஓடி வந்த லாரி, பள்ளி, கல்லூரி வாகனங்கள் மீது மோதி இருந்தாலோ, டிரான்ஸ்பார்மர் அல்லது மின்கம்பம் மீது மோதி இருந்தாலோ மிகப்பெரிய அளவில் விபத்து ஏற்பட்டு இருக்கும். ஆனால் டிரைவரின் சாமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

Next Story