திருவண்ணாமலையில் பலத்த மழை: வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது - பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு
திருவண்ணாமலையில் பெய்த பலத்த மழைகாரணமாக வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று அதிகாலை வரை பலத்த மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த மழையினால் நீர்நிலைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
திருவண்ணாமலையில் பெய்த பலத்த மழையின் காரணமாக சாலைகளிலும், தாழ்வான பகுதிகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் குண்டும், குழியுமான சாலைகளில் மழைநீர் தேங்கியது.
திருவண்ணாமலை தண்டராம்பட்டு சாலையில் உள்ள தாமரை நகர் மெயின் தெருவில் மழைநீருடன் கழிவுநீர் வீடுகளுக்குள் புகுந்ததால் இரவு முழுவதும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பெரும் அவதிப்பட்டனர்.
இதனையடுத்து பொதுமக்கள் தங்கள் வீடுகளில் புகுந்த தண்ணீரை வாளிகளில் பிடித்து வெளியே ஊற்றினர். இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திருவண்ணாமலை - தண்டராம்பட்டு சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருவண்ணாமலை நகராட்சி அலுவலர்கள் மற்றும் டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது பொதுமக்கள் கூறுகையில், தங்கள் பகுதியில் கால்வாய் வசதி அமைத்து தர வேண்டும். இருக்கும் கால்வாய்களை தூர்வாரி அகலப்படுத்தி தர வேண்டும். கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்றனர். இதையடுத்து போலீசார் பாதுகாப்புடன் கால்வாய் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
அதைத் தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
அதேபோல் திருவண்ணாமலை பைபாஸ் சாலையில் உள்ள 1,2,3-வது குறுக்கு தெருக்களில் உள்ள வீடுகளிலும் மழைநீர் புகுந்தது. இந்த பைபாஸ் சாலையில் இருபுறமும் கால்வாய்கள் உள்ளன.
இந்த கால்வாய்களை தூர்வாராததால் மழைநீர் சாலையில் ஓடி வீடுகளுக்குள் புகுந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். எனவே, கால்வாய்களை தூர்வார வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
நேற்று முன்தினம் பெய்த மழையின் அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
திருவண்ணாமலை -66.4, சேத்துப்பட்டு -32, கீழ்பென்னாத்தூர் -25.6, வெம்பாக்கம் -20, போளூர் -16.2, வந்தவாசி -14.2, செங்கம் -12.4, சாத்தனூர் அணை -11.6, தண்டராம்பட்டு -9.6, செய்யாறு -5, ஆரணி -4.2.
Related Tags :
Next Story