சென்னை திருவேற்காடு அருகே வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது பொதுமக்கள் சாலை மறியல்


சென்னை திருவேற்காடு அருகே வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 17 Oct 2019 10:30 PM GMT (Updated: 17 Oct 2019 5:58 PM GMT)

திருவேற்காடு அருகே வீடுகளுக்குள் மழைநீருடன் கழிவுநீரும் புகுந்ததால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பூந்தமல்லி,

சென்னை மற்றும் புறநகர் பகுதியில் நேற்று முன்தினம் இரவு முதல் விடிய விடிய பலத்த மழை பெய்தது. இதனால் திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட அயனம்பாக்கம் அம்பேத்கர் தெருவில் உள்ள மழைநீர் கால்வாயில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

அந்த பகுதியில் உள்ள மழைநீர் கால்வாயில் பராமரிப்பு பணிகள் முடியாததால், மழைநீர் செல்ல வழியின்றி கால்வாயில் இருந்து வெளியேறி தெருக்களில் வழிந்தோடியதுடன், அந்த பகுதியில் உள்ள சில வீடுகளுக்குள்ளும் புகுந்தது. மழைநீருடன் கழிவுநீரும் கலந்து வந்ததால் துர்நாற்றம் வீசியது.

இதனால் அந்த வீடுகளில் இருந்தவர்கள், பொருட்களை எடுத்துக்கொண்டு வெளியேறி தங்கள் உறவினர்கள் வீடுகளில் தஞ்சம் அடைந்தனர்.

இது குறித்து தகவல் தெரிவித்தும் அதிகாரிகள் யாரும் வராததால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், அம்பத்தூர்–வானகரம் சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். சாலையின் குறுக்கே கல் மற்றும் மரக்கட்டைகளை அடுக்கி வைத்ததால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்துவந்த பூந்தமல்லி தாசில்தார் காந்திமதி மற்றும் நகராட்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். டெங்கு காய்ச்சல் பரவி வரும் நேரத்தில் கழிவுநீருடன் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்ததால் குழந்தைகளுடன் அவதிப்படுகிற£ம். இதுபற்றி அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என பொதுமக்கள் தெரிவித்தனர்.

மழைநீர் கால்வாய் வேகமாக சரிசெய்யப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். ஆனாலும் அதை ஏற்க மறுத்த பொதுமக்கள், அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சாலை மறியல் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன.

நீண்டநேர பேச்சுவார்த்தைக்கு பிறகு சாலை மறியலை கைவிட்டு பொதுமக்கள், அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சுமார் 4 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story