தூத்துக்குடியில் பலத்த மழை உப்பாற்று ஓடையில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது
தூத்துக்குடியில் பெய்த பலத்த மழை காரணமாக உப்பாற்று ஓடையில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. எட்டயபுரம் தெப்பக்குளம் நிரம்பியது.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் வயல்வெளிகளில் தண்ணீர் தேங்க தொடங்கி உள்ளது. தூத்துக்குடியில் உள்ள உப்பளங்கள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கி உள்ளன. நகரின் தாழ்வான இடங்களில் மழைநீர் குளம் போல் தேங்கி கிடக்கிறது.
நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று அதிகாலை வரை தொடர்ச்சியாக மழை பெய்தது. இந்த மழை காரணமாக தூத்துக்குடி அருகே உள்ள உப்பாற்று ஓடையில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இந்த வெள்ளம் கோரம்பள்ளம் குளத்துக்கு வந்து சேர்ந்தது. இதனால் குளத்துக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. நேற்று காலையில் வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. மதியத்துக்கு பிறகு வெயில் அடித்தது.
எட்டயபுரம், கோவில்பட்டி, விளாத்திகுளம், கயத்தாறு, கடம்பூர், கழுகுமலை, ஸ்ரீவைகுண்டம், சாத்தான்குளம், திருச்செந்தூர், காயல்பட்டினம், தென்திருப்பேரை, ஆழ்வார்திருநகரி உள்ளிட்ட இடங்களிலும் நேற்று முன்தினம் இரவில் பெய்ய தொடங்கிய மழை விடிய விடிய பெய்தது.
எட்டயபுரத்தில் அதிகபட்சமாக 137 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இந்த மழையால் எட்டயபுரம் சிவசங்கரன்பிள்ளை ஓடையில் நீர்வரத்து அதிகரித்தது. அங்கிருந்து எட்டயபுரம் தெப்பக்குளத்துக்கு அதிகளவு தண்ணீர் சென்றதால், தெப்பக்குளம் நிரம்பி வழிந்து, மறுகால் பாய்ந்தது.
எட்டயபுரம் பாண்டியன் கண்மாய்க்கும் நீர்வரத்து அதிகரித்ததால், நிரம்பும் தருவாயில் இருந்தது. இதையடுத்து அந்த கண்மாயை எட்டயபுரம் தாசில்தார் அழகர், நகர பஞ்சாயத்து நிர்வாக அலுவலர் சுந்தரவேல் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இதேபோன்று கயத்தாறு அருகே முடுக்கலாங்குளம், தொட்டம்பட்டி, செவல்பட்டி, போடுபட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஓடை தடுப்பணைகளும் நிரம்பி வழிந்தன. இதனால் அங்குள்ள குளங்களுக்கு செல்லும் நீர்வரத்து அதிகரித்தது. இதையடுத்து அவற்றை வருவாய் துறையினர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பலத்த மழையால் விவசாயிகள், பொதுமக்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர்.
மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை 8 மணி நிலவரப்படி முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:-
எட்டயபுரம் - 137
திருச்செந்தூர் - 46
குலசேகரன்பட்டினம்- 7
காயல்பட்டினம் - 55
விளாத்திகுளம் - 74
காடல்குடி - 32
வைப்பார் - 36
சூரங்குடி - 41
கோவில்பட்டி - 48.5
கயத்தாறு - 49
கடம்பூர் - 40
கழுகுமலை - 33
ஓட்டப்பிடாரம் - 46
மணியாச்சி - 40.5
வேடநத்தம் - 25
கீழஅரசடி - 10
சாத்தான்குளம் - 38
ஸ்ரீவைகுண்டம் - 35.1
தூத்துக்குடி - 50.3
Related Tags :
Next Story