டெங்கு கொசுப்புழு கண்டறியப்பட்ட தனியார் பள்ளி, திருமண மண்டபத்திற்கு ரூ.15 ஆயிரம் அபராதம்


டெங்கு கொசுப்புழு கண்டறியப்பட்ட தனியார் பள்ளி, திருமண மண்டபத்திற்கு ரூ.15 ஆயிரம் அபராதம்
x
தினத்தந்தி 18 Oct 2019 4:00 AM IST (Updated: 18 Oct 2019 2:36 AM IST)
t-max-icont-min-icon

அரக்கோணத்தில் டெங்கு கொசுப்புழு கண்டறியப்பட்ட தனியார் பள்ளி, திருமண மண்டபங்களுக்கு ரூ.15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.

அரக்கோணம்,

அரக்கோணம் மற்றும் சுற்றியுள்ள கிராம பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள், திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள், தொழிற்சாலைகளில் ஆய்வு மேற்கொண்டு டெங்கு கொசுப்புழு இருப்பது கண்டறியப்பட்டால் அபாராதம் விதிக்க மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம், சுகாதார பணிகள் துணை இயக்குனர் சுரே‌‌ஷ் ஆகியோர் உத்தரவிட்டனர்.

அரக்கோணத்தில் நேற்று சுகாதாரத்துறை மற்றும் நகராட்சி இணைந்து சுகாதார பணிகள் மாவட்ட கொள்ளை நோய் தடுப்பு அலுவலர் டாக்டர் ஜி.லோகநாதன் தலைமையில் நகராட்சி சுகாதார அலுவலர் அருள்செல்வதாஸ், சுகாதார ஆய்வாளர்கள் எஸ்.தேவநாதன், ஏ.செந்தில் ஆகிேயார் கொண்ட குழுவினர் அரக்கோணம் நகரத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள அரசு, தனியார் பள்ளிகள், திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள், கடைகள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குடிநீர் தொட்டிகள், மொட்டை மாடி, கழிப்பறை மற்றும் தண்ணீர் தேங்கும் பகுதிகளில் ஆய்வு செய்தனர்.

அப்போது தனியார் பள்ளி, திருமண மண்டபம், கடைகளில் சில பகுதிகளில் டெங்கு கொசுப்புழு இருப்பது கண்டறியப்பட்டது. நகராட்சி அதிகாரிகள் உடனடியாக தனியார் பள்ளிக்கு ரூ.10 ஆயிரம், திருமண மண்டபத்திற்கு ரூ.2 ஆயிரம், மற்றொரு திருமண மண்டபத்திற்கு ஆயிரம், கடைக்கு ரூ.2 ஆயிரம் என மொத்தம் ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்தனர்.

பின்னர் டெங்கு கொசுப்புழு இருப்பதாக கண்டறியப்பட்ட பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்கள் கூடுதலாக ஈடுபடுத்த நடவடிக்கை எடுத்தனர்.

அபாராதம் விதிக்கப்பட்ட பள்ளிகள், கல்லூரிகள், வீடுகள், வணிக வளாகங்கள், தியேட்டர், தொழிற்சாலை உள்ளிட்ட பகுதிகளில் மீண்டும் டெங்கு கொசுப்புழு இருப்பது கண்டறியப்பட்டால் அபராதத்தொகை பலமடங்காக உயர்த்தி விதிக்கப்படும் என்று சுகாதார துறை அலுவலர் ஒருவர் தெரிவித்தார்.

முன்னதாக அரக்கோணம் நகரத்தில் டெங்கு கொசுவை ஒழிக்க ஒவ்வொரு வீடு, வீடாக விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. புகை அடிக்கும் பணி, மருந்து தெளிக்கும் பணியில் ஊழியர்கள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றனர்.

Next Story